Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்), தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் என். மேரி வில்சன், ஆகஸ்ட் 5, 2026 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் நிதிநிலை, கடன் சுமை, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

Republic Tamil

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் வாசிக்கப்பட்டதாகவும், மொத்தம் 198 அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சில திட்டங்கள் தொடரப்பட்டுள்ளதோடு, சில புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், செயல்பாட்டில் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான விவசாயிகளின் கடன் சுமை குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகள் முழுமையான கடன் தள்ளுபடியை எதிர்பார்த்திருந்த நிலையில், பட்ஜெட்டில் பகுதியளவிலான அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பு இடம்பெறாதது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், தமிழ்நாடு நீர் மிகை மாநிலமாக உருவாக வேண்டுமென தாம் எதிர்பார்த்ததாகவும், அதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் நதிகளை ஒன்றிணைப்பது, மழைநீரை பாதுகாப்பது மற்றும் கடலில் வீணாக கலக்கும் நீரை சேமித்து பயன்படுத்துவதற்கான விரிவான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார்.

இதையும் படியுங்க  மாபெரும் சிக்கலில் செந்தில் பாலாஜி..! பொறி வைத்த ED..! முதல்வர் விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..!

வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ற தொழில்துறைகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் மாவட்ட வாரியான தொழில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் கூறினார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே இன்று மிகப்பெரிய தேவையாக இருக்கும் நிலையில், புதிய முதலீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த தெளிவான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் நிதிநிலையைப் பற்றி பேசிய அவர், தமிழ்நாடு தற்போது ₹10.98 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், தவெக அரசு முன்பு வெளியிட்ட நிதி வெள்ளை அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து மாநிலத்தின் மொத்தக் கடன் ₹13.18 லட்சம் கோடி எனக் கூறியிருந்த நிலையில், தற்போது பட்ஜெட்டில் வேறுபட்ட தரவுகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

Republic Tamil

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) குறைந்து வரும் சூழலில், இந்தக் கடன் சுமையை எவ்வாறு குறைப்பது, வட்டிச் செலவைக் கட்டுப்படுத்துவது, வருவாயை உயர்த்துவது போன்றவற்றிற்கான தெளிவான நிதி மேலாண்மைத் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“ஒரு குடும்பத்தின் பட்ஜெட் எப்படி வருமானம், செலவு, சேமிப்பு, கடன் ஆகியவற்றை சமநிலைப்படுத்தி அமைக்கப்படுகிறதோ, அதுபோல ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டும் இருக்க வேண்டும். இன்று தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பது கவலைக்குரியது. அந்தக் கடனை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த தெளிவான அறிவிப்புகள் இல்லை. கடனுக்கான வட்டி செலவுகள் மட்டுமே ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  அமித் ஷாவின் மாயமான் அண்ணாமலை… விஜய் கேட்கலாமா..? கி.வீரமணி வீராவேசம்..!

பெண்களுக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இந்த முதல் பட்ஜெட்டில் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும், பழைய திட்டங்களின் தொடர்ச்சியே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

Republic Tamil

அதேபோல், ₹75,000 வரையிலான கூட்டுறவு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான தெளிவான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு விவரங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்குப் பதிலாக, மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அரசு செயல்படுவதாகவும், மாநிலத்தின் சொந்த வருவாயை அதிகரிக்கும் திட்டங்கள் எதுவும் தெளிவாக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இருப்பினும், பட்ஜெட்டில் இடம்பெற்ற சில அறிவிப்புகளை அவர் வரவேற்றார். குறிப்பாக, கூவம் உள்ளிட்ட நதிகளை சீரமைத்து மேம்படுத்தும் திட்டங்கள், சாலை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள், சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் ஆகியவை பாராட்டத்தக்கவை என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்புகள் அனைத்தும் தற்போது வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன என்றும், அவை முழுமையாக செயல்படுத்தப்படும் போது தான் அதன் வெற்றியை மதிப்பிட முடியும் என்றும் அவர் கூறினார். “சொல்லாக அல்ல, செயலாக மாறும் போதுதான் மக்கள் அதன் பலனை உணர்வார்கள். அப்போது அதை வரவேற்க தேமுதிக தயாராக உள்ளது” என்றார்.

இதையும் படியுங்க  "கைதான அடுத்த செகண்ட்.. கார் அனுப்பி மீட்ட CM விஜய்! கோட்டையில் நடந்த அதிரடி திருப்பம்!"

பட்ஜெட்டுக்கு எவ்வளவு மதிப்பெண் வழங்குவீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இது பள்ளித் தேர்வு அல்ல. மதிப்பெண் வழங்குவதற்கு. இன்று அவர்கள் பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்கள். அது மக்கள் கைகளில் செயலாக மாறும் நாளில்தான் நான் மதிப்பெண் வழங்குவேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

முந்தைய ஆட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் தமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், வீடு தேடி மருத்துவம், புதுமைப் பெண் உள்ளிட்ட மக்களால் வரவேற்கப்பட்ட திட்டங்கள் எந்த ஆட்சியிலும் தொடர வேண்டும் என்றார்.

ஆனால், திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றுவது மக்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது என்றும், அது வெறும் “ஃபேன்ஸி பெயர் மாற்றம்” மற்றும் விளம்பர அரசியலாக மட்டுமே பார்க்கப்படுகிறது என்றும் அவர் விமர்சித்தார். மக்களுக்கு உண்மையான பலனை அளிக்கும் திட்டங்களே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, “கடன் இல்லாத தமிழ்நாடு, வட்டி சுமை இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதே தேமுதிகவின் நோக்கம். மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நீண்டகால நிதி மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்தான் அந்த இலக்கை அடைய முடியும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago