”ஸ்டாலினை கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்..” என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில், மு.க. ஸ்டாலினை கை சைகையை விஜய் செய்து காட்டிப் பேசியது அரசியல் தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய விஜய், சபாநாயகரிடம் அனுமதி பெற்று, மு.க. ஸ்டாலினின் மிசா சம்பவம் பற்றி பேசும்போது கை சைகையைச் செய்து காட்டினார். விஜய்யின் இந்த சைகை மற்றும் பேச்சு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மறைமுகமாகக் கேலி செய்யும் வகையில் இருந்ததாகக் கூறி, திமுக நிர்வாகிகள் இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மேடைகளில் திரைப்படப் பாணியிலான கை சைகைகள் மற்றும் உருவ அமைப்பைக் குறிப்பிடும் உரையாடல்கள் சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கு உகந்தது அல்ல என்று திமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டது. அதேவேளையில், தவெக ஆதரவாளர்கள் இதனை அரசியல் ரீதியான பதிலடி என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ”தலைவர் மு.க.ஸ்டாலின் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல! அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், மிசா சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!

சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு. ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு.
ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம். சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும். அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம். தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம். தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு” என அவர் ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.
