https://republictn.com/

சென்னை தாம்பரம் அருகே, தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ‘ஏ-பிளஸ்’ பிரிவு சரித்திரப் பதிவேடு ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வண்டலூர் ஓட்டேரி காவல் எல்லையில் உள்ள மணிமங்கலம் – கரிசங்கல் காட்டுப் பகுதியில், ரவுடிகள் கஞ்சாவுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமைக் காவலர் ஆனந்தராஜ் உள்ளிட்ட குழுவினருடன் நள்ளிரவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, ‘செல்லா’ என்கிற செல்வக்குமார் மற்றும் அவரது கூட்டாளி கனகராஜ் ஆகியோர் கஞ்சாவுடன் பதுங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இருவரையும் மடக்கிப் பிடித்து காவல் வாகனத்தில் ஏற்ற முயன்றபோது, ரவுடி செல்வக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமைக் காவலர் ஆனந்தராஜை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாகவும், ரவுடி தப்பிச் செல்வதைத் தடுக்கவும், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தனது துப்பாக்கியால் செல்வக்குமாரின் இடது காலில் சுட்டுப் பிடித்தார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த தலைமைக் காவலர் ஆனந்தராஜும், காலில் குண்டு காயமடைந்த ரவுடி செல்வக்குமாரும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான கனகராஜிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், இவர்களிடமிருந்து சுமார் 21 முதல் 22 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு காயமடைந்த ‘செல்லா’ என்ற செல்வக்குமார், ஓட்டேரி காவல் நிலையத்தின் ‘ஏ-பிளஸ்’ பிரிவு சரித்திரப் பதிவேடு ரவுடி ஆவார். இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago