ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த செல்வி, திருமணத்திற்குப் பிறகு மதுரையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
விடுமுறை நாட்களில், தனது இரட்டை பெண் குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல், தற்போது பள்ளி விடுமுறை என்பதால், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நேற்று இரவு தனது தாயார் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, இரட்டைச் சிறுமிகளில் ஒருவரான சாய் தீப்தி காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து, குடும்பத்தினரும் உறவினர்களும் அந்தச் சிறுமியை பல்வேறு இடங்களில் தீவிரமாகத் தேடியதுடன், ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், காவல்துறையினரும் உறவினர்களுடன் இணைந்து அதிகாலை முதலே தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மதியம் சுமார் 12 மணி அளவில், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சிறுமி சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சிறுமியின் உடலை கிணற்றிலிருந்து மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருவாடனை தொகுதி அமைச்சர் வி.கே.ராஜீவ் சம்பவ இடத்திற்குச் சென்று, குழந்தையை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மை காரணத்தை விரைந்து கண்டறிய வேண்டும் என்றும், பிரேதப் பரிசோதனையை துரிதப்படுத்தி, குற்றவாளிகள் இருந்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்தச் சிறுமி தவறுதலாக கிணற்றில் விழுந்தாரா, அல்லது யாரேனும் குற்ற நோக்கத்துடன் குழந்தையை கிணற்றில் வீசியுள்ளனரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலைக் கண்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
