Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

sowmiya anbumani

பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, “மது இல்லாத தமிழகம்” என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தாராபுரம்- மதுராந்தகம் இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பாமக- தவெக இடையேயான உறவு குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இடைத்தேர்தலில் பாமக யாருக்கு ஆதரவு?
இந்த இடைத்தேர்தலில் தார்மீக ரீதியாக அதிமுகவை ஆதரிக்க வேண்டிய நிலையில் இருந்ததாகக் கூறப்பட்ட பாமக, யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறி ஒதுங்கி நின்றது. இதனால் மதுராந்தகம் தொகுதியில் கணிசமாக உள்ள பாமக ஆதரவு சமூகத்தினரின் வாக்குகள் ஆளுங்கட்சியான தவெகவுக்குச் செல்லும் என்ற ஒரு அரசியல் கணக்கு போடப்பட்டது.

ஆனால், தேர்தல் களத்தில் நிலைமை வேறு விதமாக இருந்ததாக தகவல்கள். மறுபுறம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுராந்தகம் தொகுதியில் விசிக தொண்டர்கள் தீவிரமாக களப்பணி செய்து வந்தனர்.

Republic Tamil

திருமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய்
இந்தச் சூழலில், அக்டோபர் 1ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு மேடையில் மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்க  செல்வப்பெருந்தகை அவுட்.. மாணிக்கம் தாகூர் இன்! அதிரடி முடிவை எடுத்த காங்கிரஸ் தலைமை!

இந்த சம்பவம், பாமகவுக்கு விஜய் தரப்பில் இருந்து “உங்களுக்கு இங்கு வேலை இல்லை” என்ற மறைமுகமான அரசியல் மெசேஜாக பார்க்கப்பட்டது. இதனால் பாமக மேலிடத்தில் கடும் கோபம் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்.

விஜய்க்கு எதிராக போராட்டமா?
இதன் தொடர்ச்சியாகவே, சௌமியா அன்புமணி “மது ஒழிப்பு இயக்கம்” என்ற அமைப்பை உருவாக்கி இருப்பதாகவும், இடைத்தேர்தல் முடிந்ததும் தவெக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்.

ஆரம்பத்தில், இடைத்தேர்தலுக்குப் பிறகு விஜய் அமைச்சரவையில் சௌமியா அன்புமணி அமைச்சராக இடம்பெறுவாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் இருந்தது. ஆனால், இடைத்தேர்தலுக்கு முன்பாகவே விஜய் தலைமையிலான தவெக தரப்பில் இருந்து இதுகுறித்து தெளிவான பதில் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாமக-தவெக இடையேயான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Vijay’

கம்யூனிஸ்ட்களின் விஜய் எதிர்ப்பு ஏன்?
இதற்கிடையே, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதற்கும், ஆரம்பகட்டத்தில் பாமக மீது ஆளுங்கட்சியான தவெக காட்டிய நெருக்கமே ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படியுங்க  தலைமுறைகளைக் கடந்த தலைவன்: தோற்கடிக்க முடியாத நாயகன்..! 76 வயதிலும் குறையாத மோடி மேஜிக்!

இடைத்தேர்தலுக்குப் பிறகு இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டால், சட்டமன்றத்தில் நான்கு எம்எல்ஏக்களை வைத்திருக்கும் பாமகவின் ஆதரவைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற அரசியல் கணக்கை தவெக தரப்பு ஆரம்பத்தில் போட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த உள்குத்து கணக்கை புரிந்துகொண்டதால்தான் இடதுசாரிகள் தவெகவுக்கு எதிராக களத்தில் வேட்பாளர்களை நிறுத்தியதாகவும், திமுக – அதிமுகவை விட விஜயை கடுமையாக தாக்கிப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

பாமகவை காட்டி திருமாவை வெறுப்பேற்றிய தவெக?
ஆரம்பகட்டத்தில் பாமகவை முன்னிறுத்தி திருமாவளவனையும், இடதுசாரிகளையும் தவெக தரப்பு அதிருப்தியடையச் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன் விபரீத விளைவுகளை தற்போது ஆளுங்கட்சி உணர்ந்துவிட்டதாகவும், இதனால் சத்தமில்லாமல் தனது அரசியல் பாதையை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முதலமைச்சரின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, பாமகவை அமைச்சரவைக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Republic Tamil

“பாமகவை விட விசிகதான் சரியான சாய்ஸ்”
ஆனால், அமைச்சர் ஆதவ் அர்ஜுன் வேறொரு நிலைப்பாட்டை விஜயிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பாமகவை விட திருமாவளவன் தலைமையிலான விசிகதான் தங்களுக்கு சரியான அரசியல் தோழன் என்றும், விசிகவை கைவிடக்கூடாது என்றும் அவர் விஜயிடம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்

இதையும் படியுங்க  ''நான் ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை சட்டப்படி அகற்றம்: அண்ணாமலை அதிரடி சபதம்"

இதன் விளைவாகவே தற்போது தவெக தரப்பில் இருந்து திருமாவளவனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும், பாமகவைச் சுற்றி அரசியல் ரீதியான இடைவெளி உருவாகி வருவதும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சௌமியா அன்புமணி தொடங்கியுள்ள மதுவிலக்கு இயக்கம், எதிர்காலத்தில் தவெக அரசுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் தளமாக மாறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாமக – தவெக உறவில் ஏற்பட்ட விரிசல், விசிகவுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், இடதுசாரிகளின் விஜய் எதிர்ப்பு என தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடைபெறும் இந்தக் காய் நகர்த்தல்கள், வரும் நாட்களில் எந்த மாதிரியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 minutes ago at 46 minutes ago