அரசு பெண் ஊழியர்களுக்கு இனி 3வது குழந்தைக்கும் ஓராண்டு பிரசவ விடுப்பு அறிவித்துள்ளது தவெக அரசு.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 3வது குழந்தை பிறப்புக்கும் இனி 365 நாட்கள் பிரசவ விடுப்பு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார். இதுவரை 3வது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தக் கால அவகாசம் ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு முதல் மற்றும் 2வது குழந்தை பிறப்பின்போது தலா ஓராண்டு வரை பிரசவ விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 3வது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு மட்டும் 12 வாரங்கள், அதாவது 3 மாதங்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
3வது குழந்தைக்கும் முதல் இரண்டு பிரசவங்களைப் போலவே 365 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் சரத்குமார், தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 3வது குழந்தைக்கான பிரசவ விடுப்பு 12 வாரங்களில் இருந்து ஓராண்டாக, அதாவது 365 நாட்களாக அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக, 3வது குழந்தை பிறப்புக்கு 12 வாரங்கள் மட்டுமே பிரசவ விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த சாய்நிஷா, மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் பணியாற்றி வருகிறார். தனது 3வது பிரசவத்துக்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை விடுப்பு கோரி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், 3வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையைச் சுட்டிக்காட்டி, ஏப்ரல் மாதம் பணியில் சேர வேண்டும் என்ற அடிப்படையில் 3 மாத விடுப்பு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து சாய்நிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 3வது பிரசவத்துக்கும் ஓராண்டு வரை பிரசவ விடுப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டது.
மேலும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறிய நீதிமன்றம், சாய்நிஷாவுக்கு ஓராண்டு வரை பிரசவ விடுப்பு வழங்க உத்தரவிட்டது.
முதல் மற்றும் 2வது பிரசவங்களின்போது பெண்கள் எதிர்கொள்ளும் அதே உடல் ரீதியான சிரமங்களையும் 3வது பிரசவத்தின்போதும் எதிர்கொள்கிறார்கள். எனவே, 3வது பிரசவத்துக்கு மட்டும் குறைந்த அளவு விடுப்பு வழங்கி பாரபட்சம் காட்ட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அத்துடன், 3வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு என்ற தமிழக அரசின் அரசாணை மாவட்ட நீதித்துறையை கட்டுப்படுத்தாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்தச் சூழலில், தற்போது தமிழக அரசு 3வது குழந்தைக்கும் 365 நாட்கள் பிரசவ விடுப்பு வழங்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
