பரோலில் வெளிவந்து தலைமறைவாகி, பாலிவுட் சினிமாவில் நடிகராக மாறிய கொலை குற்றவாளி ஒருவர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமாவில் நடித்தும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது எப்படி என்பது குறித்து தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் படங்களான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான், ஜெயஸ் பாய் ஜோர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹேமந்த் வைஷ்ணவ். இவர் ஹேமந்த் நாக்கின்தாஸ், புருஷோத்தம்தாஸ் வைஷ்ணவ், ஹேமந்த் மோடி என பல்வேறு பெயர்களிலும் அறியப்பட்டவர்.
சினிமாவுடன் மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான மலையாள படம் எம்புரான் உள்ளிட்ட படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், 53 வயதான நடிகர் ஹேமந்த் வைஷ்ணவ் அகமதாபாத்தில் உள்ள காந்திநகர் மெட்ரோ நிலையம் அருகே குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அகமதாபாத்தின் பார்வநாத் டவுன்ஷிப் பகுதியில் நிலத் தகராறு காரணமாக இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் நரேந்திரா என்ற நன்னோ யஷ்வந்த் காம்ப்லே கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் ஹேமந்த் வைஷ்ணவ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2008 ஆகஸ்ட் 27ஆம் தேதி நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் மெஹசானா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஹேமந்த் வைஷ்ணவ், 2014 ஜூலை 25ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரோல் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதன்படி அவருக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டது.
ஆனால், பரோலில் வெளியே சென்ற அவர் 30 நாள் காலக்கெடு முடிந்த பின்னரும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவானார். இதையடுத்து அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த போலீசார் கடந்த 12 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
இந்த காலத்தில் அவர் மும்பைக்கு சென்று தனது பெயரை மாற்றிக் கொண்டு பாலிவுட் சினிமாவில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்ததாகவும், பிரபல நடிகர்களான அமீர்கான், ரன்பீர் சிங், சன்னி தியோல் உள்ளிட்டோரின் படங்களிலும் நடித்ததாகவும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் தனது அடையாளத்தை மறைத்து, மாறுவேடங்களில் நடித்து வந்ததால் போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், போலீசார் தேடுதல் நிறுத்தப்பட்டதாக எண்ணி, ஹேமந்த் வைஷ்ணவ் மீண்டும் அகமதாபாத்துக்கு வந்து உறவினர்களை சந்தித்துள்ளார். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் அவரை கண்காணித்து, காந்திநகர் மெட்ரோ நிலையம் அருகே கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். பரோலில் வெளிவந்து சினிமாவில் நடிகராக மாறிய கொலை குற்றவாளி மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
