Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் மாணவிகளை ஏமாற்றி மோசடி செய்யும் கும்பலை, மூணாறில் தற்போது “கே.கே. பாய்ஸ்” என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் இரண்டு பள்ளி மாணவிகள் இவர்களின் வலையில் சிக்கி பெரிய ஏமாற்றத்தையும் கொடுமையையும் எதிர்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி போல, இன்றைய காலத்தில் “இன்ஸ்டா நட்பு கேடாய் முடியும்” என்பதே வைரலாக பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடக நட்புகள் சிலருக்கு நல்ல பலன்களை அளித்தாலும், பலருக்கு அது பேராபத்தாக மாறியுள்ளதையும் நடைமுறையில் காண முடிகிறது.

அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம்தான் மூணாறில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மூணாறு டி.எஸ்.பி. சந்திரகுமாரிடம் பேசியபோது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது தகவலின்படி, மூணாறில் பிளஸ்-2 படிக்கும் இரண்டு மாணவிகள், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞர்களால் ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு இரண்டு நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த 22 வயதான சுரேஷ் மற்றும் அவருடன் வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்க  “KPY பாலா பெயரில் இன்ஸ்டாகிராம் மெசேஜா? உஷார் மக்களே!

சில மாதங்களுக்கு முன்பு, சுரேஷுக்கும் மூணாறில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து, நீண்ட நேரம் உரையாடி வந்துள்ளனர்.

சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, சுரேஷ் தாம் மூணாறு வருவதாகவும், நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதற்கு மாணவியும் சம்மதித்துள்ளார். பின்னர், தன்னுடன் நண்பரும் வருவதாகக் கூறி, மாணவியிடம் ஒரு தோழியையும் அழைத்து வருமாறு கேட்டுள்ளார். அதற்கும் மாணவி சம்மதித்து தனது தோழியை அழைத்து வந்துள்ளார்.

கடந்த 15-ஆம் தேதி, சுரேஷ் தனது 17 வயது நண்பருடன் மூணாறு வந்துள்ளார். மாணவிகளும் அங்கு வந்து நான்கு பேரும் சந்தித்துள்ளனர். பின்னர், “ஜாலியாக இருக்கலாம்” என்று கூறி, இருவரும் மாணவிகளை ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இரண்டு நாட்கள் மாணவிகளை அடைத்து வைத்து, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் மாணவிகள் விடுவிக்கப்பட்டனர்.

இரண்டு நாட்கள் பள்ளிக்கு வராததால், பள்ளி ஆசிரியர்கள் காரணம் கேட்டபோது, மாணவிகள் கதறி அழுதபடி நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். இதையடுத்து ஆசிரியர்கள் மூணாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படியுங்க  உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கா? இளநீரை குடிச்சிடாதீங்க! எச்சரிக்கை..!

போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி, ரிசார்ட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது.

பின்னர் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரிசார்ட்டில் தங்கும்போது போலியான அடையாள அட்டைகளையும் தவறான தொலைபேசி எண்களையும் கொடுத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

உண்மையான விவரங்களை சரிபார்க்காமல், அவர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்த ரிசார்ட் நிர்வாகத்தின் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 22 வயது சுரேஷ் தேவிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 17 வயது சிறுவன் சிறார் என்பதால், கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மூணாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, அனைத்து ரிசார்ட்கள், ஹோம்-ஸ்டேக்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தங்க வருபவர்களின் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண்களை முழுமையாக சரிபார்த்து, அவர்கள் பற்றிய விவரங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகே அறைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வயதில் மிகவும் இளமையாகத் தோன்றுபவர்களின் பின்னணியை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  உயிர் துளிர்த்த ஒன்பது நாட்கள்..! சூர்யா மருத்துவமனையின் சரித்திர சாதனை..!

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெயர்கள் சட்டரீதியாக வெளியிடப்படவில்லை. அதேபோல், குற்றச்சாட்டில் தொடர்புடைய 17 வயது சிறுவனின் பெயரும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், சமூக ஊடகங்கள் மூலம் உருவாகும் நட்புகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் பல நன்மைகளை வழங்கினாலும், தவறான நட்புகள் மற்றும் அறிமுகங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அடுத்தடுத்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எனவே, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சமூக ஊடக பயன்பாட்டில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் இணையத்தில் உருவாகும் நட்புகள் குறித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

சிறிய அளவிலான தவறுகள்கூட வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதால், சமூக ஊடக நட்புகளில் மிகுந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் அவசியம் என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் முக்கியமான பாடமாகும்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago