காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் (AIML) இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷெரின் (19) என்ற மாணவி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவி ஷெரின் (19) உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அக்கல்லூரியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது அதே கல்லூரியில் இசிஇ இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சசிதரன் (19), நேற்று மதியம் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் இந்த மாணவனின் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து உடனடியாக அந்த மாணவர் மீட்கப்பட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவர் சசிதரன் கல்லூரிக்கு சரிவர வராததால் வருகை பதிவு மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கல்லூரி பேராசிரியர் சசிதரனிடம் விளக்கம் கேட்ட போது திடீரென வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து சம்பவத்தை அடுத்து கல்லூரி மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விடுதியில் தங்கி படிக்கும் 3, 4ம் ஆண்டு மாணவர்கள் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
