Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

A.raja

திமுக எம்பி ஆ. ராசா, தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு அதிகாரப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரை விமர்சித்து ஆ. ராசா பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது அநாகரிகமான பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது மற்றும் அவரது தியாகங்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், திமுக தலைவர்களின் தியாக வரலாற்றை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என்ற கோபத்தில் பேசிய ஆ. ராசா, “என் தலைவனின் தியாகத்தைச் சந்தேகப்பட்டால், உங்களின் பிறப்பை நான் சந்தேகப்படுவேன். முடிந்தால் என் மீது வழக்குத் தொடருங்கள்” என அமைச்சர் நிர்மல்குமாரை கடுமையான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளில் விமர்சித்துப் பேசினார்.

A.raja

தவெக-வுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் நோக்கில் ஆ. ராசா பேசிய இந்த வார்த்தைகள், தவெக ஆதரவாளர்களை மட்டுமின்றி திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் சமூக வலைத்தள ஆதரவாளர்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தின.

இதையும் படியுங்க  "விசிக-வை உடைக்கப் பார்க்குறாங்க..!'' தவெக ஆட்சிக்கு திருமாவளவன் கொடுத்த '6 மாத' கெடு..!

அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர, தனிநபரை இழிவுபடுத்தும் வகையில் அநாகரிகமாகப் பேசக் கூடாது என திமுகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், ஆ. ராசாவின் பேச்சு தொடர்பான சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.

இந்த ஒட்டுமொத்த விமர்சனங்களுக்குப் பிறகு, ஆ. ராசா தனது எக்ஸ் தளப் பதிவில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்து தான் பேசிய அநாகரிகமான வார்த்தைகளை எவ்வித தயக்கமும் இன்றி முழுமையாகத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். தனது பேச்சு ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானதாக இருப்பதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அவர் இந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், தனது பதிவின் இறுதியில், “நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்றும் ஆ. ராசா குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் தெரிவித்த வருத்தம் உண்மையான மன்னிப்பா அல்லது தவெக-வுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா என்ற விவாதமும் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் எழுந்துள்ளது.

ஆ. ராசாவின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மேட்டுப்பாளையம் தவெக சட்டமன்ற உறுப்பினர் என். சுனில் ஆனந்த், ஆ. ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆ. ராசா முதலில் அரசியல் நாகரிகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைப் பொதுவெளியில் ஒருமையில் பேசுவது முறையானதல்ல. இனிமேல் இப்படிப் பேசினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்க  "என்னை கன்னத்திலேயே அடித்திருக்கிறார்!" – மேடையிலேயே ஸ்டாலின் உடைத்த சீக்ரெட் ஃபிளாஷ்பேக்!

இதற்கிடையே, தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. தவெக ஆதரவாளர்கள் ஆ. ராசாவின் அநாகரிகமான பேச்சைச் சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் நிலையில், திமுக தரப்புப் பேச்சாளர்கள், அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் விஜய் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்து அநாகரிகமாகக் கேள்வி எழுப்பியதால்தான் அதே தொனியில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறி ஆ. ராசாவின் பேச்சை நியாயப்படுத்தி வருகின்றனர். “நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் கருத்து தெரிவித்துள்ளார். திமுகவினர் மீது எத்தனை ஆண்டுகள் தேடினாலும் எவ்விதத் தவறுகளையும் கண்டுபிடிக்க முடியாது என்றும், திமுக ஆட்சியில் அப்படிப்பட்ட தவறுகள் நடைபெறவே இல்லை என்றும் கூறி, தவெக தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இதனிடையே, சென்னை சைதாப்பேட்டையில் காவல்துறையின் முறையான அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக எம்பி ஆ. ராசா மற்றும் தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையும் தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  திமுகவுடன் அண்டர் டீலீங்க்… பிரான்ஸில் விஜய் மேனேஜர் 'ரூட்' ஜெகதீஷுடன் பேரம்..! அம்பலமான ரகசிய சந்திப்பு..!

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ஆ. ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தவெக-வை அரசியல் ரீதியாக ஆரம்பக்கட்டத்திலேயே எதிர்கொள்ளும் நோக்கில் திமுக சார்பில் போராட்டங்களும் கடுமையான அரசியல் பேச்சுகளும் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, திமுகவின் முக்கிய பெண் முகமாகக் கருதப்படும் எம்பி கனிமொழி, மேடைகளில் கண்ணியம் தவறிப் பேசும் பேச்சாளர்களை ஏற்கனவே பலமுறை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆ. ராசாவின் பிறப்பு குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு, திமுகவின் மகளிர் அணியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கட்சித் தலைமை ஆ. ராசாவைத் தனிப்பட்ட முறையில் அழைத்து எச்சரித்ததால்தான் அவர் உடனடியாக எக்ஸ் தளத்தில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததாக அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இவ்வாறு, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைகளை ஆ. ராசா திரும்பப் பெற்றுக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ள போதிலும், “திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்ற அவரது வார்த்தை தற்போது தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago