தமிழகத்தில் தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை வீழ்த்தவும், சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சி மாற வைக்கவும் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் அரங்கேறி வருவது அம்பலமாகியுள்ளது. தவெக எம்.எல்.ஏ-க்களிடம் தலா 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்ட இந்த விவகாரத்தில், தற்போது யூடியூபர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடுகளில் சோதனையும் தீவிரமடைந்துள்ளது.
தவெக எம்.எல்.ஏ-வுக்கு மிரட்டல்
சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதன் மூலம் அரசியல் குழப்பத்தை விளைவித்து தவெக அரசை கவிழ்க்க கடந்த 40 நாட்களாகத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தவெக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெரும் பணம் கொடுத்து இழுக்கப் பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்த சதியின் ஒரு பகுதியாக, தவெக-வின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனால், இந்த பேரப் பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சி மாற எம்.எல்.ஏ இளையராஜா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பணம் வாங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ‘IPDS’ திருநாவுக்கரசு என்ற யூடியூபர், எம்.எல்.ஏ இளையராஜாவுக்குப் போன் மூலமாகத் கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தவெக எம்.எல்.ஏ-வை மிரட்டி வேறு கட்சியில் இணைக்க முயன்ற குற்றத்திற்காக யூடியூபர் IPDS திருநாவுக்கரசுவை காவல்துறை தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளது.

உதயநிதி உத்தரவின் பேரில் பேரமா?
இந்த விவகாரம் தொடர்பாகத் தவெக-வின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது காவல்துறை மற்றும் கட்சித் தலைமையிடம் அடுக்கடுக்கான புகார்களை அளித்து வருகின்றனர். திமுகவின் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில்தான் தவெக எம்.எல்.ஏ-க்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க இந்த பேர முயற்சிகள் நடத்தப்பட்டதாகப் புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரத்திற்குப் பணியாத சில சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்குத் தொடர்பா?
இந்த ஒட்டுமொத்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி மற்றும் குதிரை பேர நெட்வொர்க்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்பு இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க முயன்ற இந்த வழக்கில் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சதித் திட்டம் தொடர்பான மிக முக்கியமான சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தலைமறைவாக உள்ள அசோக்கை கைது செய்ய சென்னை போலீசார் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.

சும்மா விடமாட்டோம் தவெக எச்சரிக்கை
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள தவெக அரசின் அமைச்சர் நிர்மல் குமார், “தற்போதைய மக்கள் ஆதரவு பெற்ற தவெக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்று கடந்த 40 நாட்களாகத் திட்டமிட்டுச் சதி வேலைகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற கீழ்த்தரமான, கேவலமான அரசியல் வேலைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் பாயும்” எனத் தவெக அரசு சார்பில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
யூடியூபர் கைது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் நள்ளிரவு ரெய்டு, திமுக தலைவர்களின் பெயர்கள் அடிபடுவது என இந்த விவகாரம் தமிழக அரசியலை உச்சக்கட்டப் பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. தவெக அரசின் புலனாய்வுப் பிரிவும், சென்னை போலீசாரும் இந்த வழக்கை மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளதால், வரும் நாட்களில் இன்னும் பல முக்கிய அரசியல் விக்கெட்டுகள் சரிந்து கைது நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
