தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மாலை மற்றும் நேரங்களில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சுமார் 1.5 கிமீ உயரம் வரை தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்றும் மற்றும் நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள். திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும் குறைபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

