Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மும்பையைச் சேர்ந்த ஜொமாட்டோ (Zomato) டெலிவரி ஊழியரான உமா சங்கர், தனது கடின உழைப்பின் மூலம் ஒரே மாதத்தில் ரூ.1.04 லட்சம் வருமானம் ஈட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். அவரது டெலிவரி டேஷ்போர்டு விவரங்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

உமா சங்கர், ஒரு மாதத்தில் மொத்தம் 1,013 ஆர்டர்களை வெற்றிகரமாக டெலிவரி செய்து, ரூ.1,04,155 வருமானம் ஈட்டியுள்ளார். இதற்காக அவர் அந்த மாதத்தில் மொத்தம் 411 மணி நேரம் உழைத்துள்ளார்.

தினசரி சராசரியாக 13 முதல் 14 மணி நேரம் வரை பணியாற்றிய அவர், நாளொன்றுக்கு சுமார் 34 முதல் 35 ஆர்டர்களை நிறைவு செய்துள்ளார்.

அவரது வருமானம் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இதுகுறித்து இருவேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் கார்ப்பரேட் ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையாக சம்பாதிக்க முடியும் என்பதற்கு உமா சங்கர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பலர் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், இந்த வருமானம் இன்சென்டிவ், போனஸ் மற்றும் கூடுதல் வேலை நேரத்தின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் மட்டுமே என்றும், பெட்ரோல் செலவு, வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை கழித்தால் நிகர வருமானம் குறையும் என்றும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், தினமும் 14 மணி நேரம் ஓய்வின்றி பணியாற்றுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

ஜொமாட்டோ நிறுவனத்தின் தரவுகளின்படி, ஒரு டெலிவரி பார்ட்னர் தினமும் 10 மணி நேரம், மாதத்தில் 26 நாட்கள் பணியாற்றினால் சராசரியாக ரூ.26,500 வரை மொத்த வருமானம் ஈட்ட முடியும். செலவுகளை கழித்த பிறகு சுமார் ரூ.21,000 வரை நிகர வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், உமா சங்கர் ஒரே மாதத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டியது அவரது அசாதாரண உழைப்பின் விளைவு என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago