சீர்காழி அருகே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்த மாணவி, தனது உயர்கல்விக்காக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காடாக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகள் அபர்ணா. இவர் வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 473 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தங்குவதற்கு நல்ல வீடு கூட இல்லாத ஏழ்மை நிலையில், பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில், மாணவி அபர்ணாவின் இந்த சாதனைக்கு கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தனது உயர்கல்விக்கு உதவவும், நல்ல வசிப்பிடம் ஏற்படுத்தி தரவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி அபர்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி அபர்ணா கூறுகையில்,
“நான் வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். என் அம்மா, அப்பா இருவரும் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். எனது எம்பிபிஎஸ் போன்ற உயர்கல்விக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மாணவியின் இந்த சாதனைக்கும், அவரின் உயர்கல்வி கனவுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
