https://republictn.com/

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான திருப்பத்தைக் கண்டுள்ளது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களை நோக்கி காய்கள் நகர்த்தப்பட்டு வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் அஸ்திவாரத்தையே உலுக்கும் வகையில் ஒரு மெகா அரசியல் மாற்றம் இன்று நிகழ்ந்துள்ளது. அதிமுகவின் முன்னணி முகங்களாக வலம் வந்த 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 7 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எனப் பெரும் பட்டாளமே இன்று விஜய் தலைமையிலான தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன், கடம்பூர் ராஜூ ஆகியோரின் இந்தத் திடீர் முடிவு அதிமுக தலைமைக்கு விழுந்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது. இவர்களுடன் கோவிந்தசாமி, சுந்தரராஜூ, ராஜமுத்து, மான்ராஜூ, பன்னீர்செல்வம், ராஜவர்மன், வி.கே.ஆர்.சீனிவாசன் ஆகிய 7 முன்னாள் விக்கெட்டுகளும் தவெக கூடாரத்திற்குள் வீழ்ந்துள்ளன. கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட இந்தத் தலைவர்களின் இடப்பெயர்வு, அந்தப் பகுதிகளில் அதிமுகவின் பலத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

விஜய்யின் ‘தவெக’ அரசியல் களத்தில் தடம் பதித்ததில் இருந்தே, திராவிடக் கட்சிகளின் அதிருப்தியாளர்கள் பலரும் அவரது பக்கம் நகர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது நிஜமாகியுள்ளது. “அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகளில் தொண்டர்களுக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் தொய்வு ஏற்பட்டுள்ளதே இந்த விக்கெட்டுகளுக்குக் காரணம்” என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

அதிமுகவிலிருந்து வெளியேறிய இந்த மெகா பட்டாளம் தவெகவுக்குப் பெரும் உத்வேகத்தைத் தந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், கோட்டையைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுகவின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும்? இந்தத் திடீர் வரவால் தவெகவின் அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சல் எப்படி இருக்கும்? தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago