கோயம்புத்தூர் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஸ்ரீநிதி மோகன் (வி. ஸ்ரீநிதி), காங்கிரஸ் கட்சியில் நிலவிய உள்கட்சிப் பூசல் மற்றும் தொடர்ச்சியான புறக்கணிப்புகளை காரணமாகக் காட்டி அக்கட்சியிலிருந்து விலகி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட தாம், தற்போது திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்வதாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், கூட்டணி கட்சியாக நீண்ட காலமாக இருந்து வந்த காங்கிரஸின் செயல்பாடுகளில் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் வாய்ப்பு வழங்கப்பட்டதற்காக கட்சித் தலைமையிடம் நன்றியுணர்வு இருப்பதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், கட்சிக்குள் நிலவிய கோஷ்டிப் பூசல்கள் காரணமாக தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும், கொங்கு மண்டலத்தில் சில தலைவர்கள், குறிப்பாக சில பெண் நிர்வாகிகள், மற்ற பெண்கள் அரசியலில் முன்னேறக் கூடாது என்ற மனநிலையுடன் செயல்படுவதாக தாம் உணர்ந்ததாகவும் கூறினார். உண்மையாக உழைப்பவர்களை ஓரங்கட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தற்போது ஆட்சியில் பங்குபெற்று இரண்டு அமைச்சர்களைப் பெற்றிருந்தாலும், சிலரின் சுயநல அரசியல் காரணமாக அவசரமாக எடுக்கப்பட்ட முடிவுகளாகவே அவற்றைப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது ஆட்சியில் இல்லாவிட்டாலும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கு எதிரான ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையிலேயே அந்தக் கட்சியில் இணைந்ததாகக் கூறிய அவர், தொடர்ந்து ஏற்பட்ட புறக்கணிப்புகள் காரணமாகவே இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக விளக்கமளித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒரு பகுதியாகவே தேர்தலை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் திராவிட சித்தாந்தம் மிகவும் அவசியமானதாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கவர்ச்சி அரசியல் மற்றும் மாயையான வாக்குறுதிகளால் பலர் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு திராவிட சித்தாந்தம் வழிகாட்டும் சக்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அரசியலுக்கு புதிதாக வரும் பெண்கள் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.
மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருப்பதாகக் கூறுவது மட்டுமே போதாது; கொள்கை உறுதியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் செயல்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உண்மையான கொள்கை சார்ந்த இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கும், இளைஞர்களின் எதிர்காலத் தேவைகளுக்கு பதிலளிப்பதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை தமக்குள் உறுதியாக இருப்பதாகவும், இன்றைய இளைஞர்களின் தேவையாக திராவிட சித்தாந்தமே உள்ளது என்ற நம்பிக்கையுடன் தனது அரசியல் பயணத்தை திமுகவில் தொடர உள்ளதாகவும் ஸ்ரீநிதி மோகன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சில வாரங்களிலேயே அவர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
