தமிழ்நாட்டின் 2026 தேர்தலில் யார் ஆட்சியை அமைக்கப்போவது? என்கிற விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க முக்கியப் புள்ளிகள் பலர் இம்முறை மண்ணைக் கவ்வுவது உறுதி என அடிமட்டத் தொண்டர்களே பேசத் தொடங்கியுள்ளனர். ‘வெற்றி பெற்றால் அது அதிசயம்’ எனச் சொல்லும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்களின் வெற்றிக் கனவு கைகூடுவது ஆச்சரியம் தான் என்று அந்தந்தக் கட்சியினரே ரகசியம் பேசத் தொடங்கியுள்ளனர்.
காட்பாடி: துரைமுருகன்
தி.மு.க., பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் வயது மூப்பால் ஓராண்டாக மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக இருந்தார். இதனால் அவருக்குப் பதில் மகன் கதிர் ஆனந்திற்கு மாவட்டச் செயலர் பதவி வழங்கப்பட்டு, துரைமுருகனை ஓய்வெடுக்க வைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார். ஆனால், கடைசி நேரத்தில் ‘டை’ அடித்து அறிவாலயம் வந்த துரைமுருகன், அடம்பிடித்து மீண்டும் காட்பாடி சீட்டை வாங்கிவிட்டார். கடந்த தேர்தலில் வெறும் 746 ஓட்டுகளில் தப்பிய இவருக்கு எதிராக, இம்முறை மகிமண்டலம், பெருமாள்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. கதிர் ஆனந்தின் செயல்பாடுகளும் மைனஸாக மாற, ‘துரை அண்ணனிடமிருந்து முதல்முறையாக பசை வருகிறது’ என்று நிர்வாகிகள் அதை அமுக்கி வருவது தான் உச்சகட்ட சோகம்.
ராசிபுரம்: மதிவேந்தன்
முதல்முறை வென்று அமைச்சரான மதிவேந்தனுக்கு எதிராக ராசிபுரம் தி.மு.க.,வே போர்க்களமாக உள்ளது. மாவட்டச் செயலர் ராஜேஷ்குமார் மாநில அரசியலுக்கு வரத் துடிப்பதால், மதிவேந்தன் வெல்வதை அவர் விரும்பவில்லை. பஸ் ஸ்டாண்டைத் தவிர எதையும் செய்யவில்லை என்ற அதிருப்தி ஒருபுறம், பா.ஜ., வேட்பாளர் பிரேம்குமார் வைட்டமின் ‘ப’வை தாராளமாக இறக்குவது மறுபுறம் என மதிவேந்தன் பாடு திண்டாட்டமாக உள்ளது.
திருமயம்: ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எப்போதும் சொற்ப வாக்குகளிலேயே வெல்பவர். இம்முறை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு எதிராக மற்ற சமூகத்தினர் அணி திரண்டுள்ளனர். அண்டை தொகுதி அமைச்சர் மெய்யநாதன், ரகுபதி வீழ்ந்தால் தான் தனக்கு மா.செ., பதவி கிடைக்கும் என நினைத்து, ரகுபதிக்கு உதவியாக இருந்த தமிழர் தேசம் கட்சி செல்வகுமாரை நத்தம் தொகுதிக்கு அனுப்பி ‘செக்’ வைத்துள்ளார். முத்தரையர் ஓட்டுகள் அ.தி.மு.க., பக்கம் சாய வாய்ப்புள்ளதால் ரகுபதியின் நிலை கவலைக்கிடம்!
குறிஞ்சிப்பாடி: பன்னீர்செல்வம்
25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருக்கும் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ‘பண்ணையார்தனமான’ பேச்சு பட்டியல் மற்றும் மீனவர் சமூகத்தினரை ஆத்திரப்படுத்தியுள்ளது. வி.சி.க.,வுக்கு உதவத் தலைமை உத்தரவிட்டும் அவர் கண்டுகொள்ளாததால், வி.சி.க.,வினர் தேர்தல் வேலை செய்யாமல் முடங்கியுள்ளனர். 2011 தோல்வி மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் வைட்டமின் ‘ப’வை மட்டுமே நம்பி இருக்கிறார் பன்னீர்செல்வம்.
ராணிப்பேட்டை:காந்தி
அமைச்சர் காந்தி தனது மகன் வினோத்திற்குச் சீட் கேட்டார். ஆனால், ‘வினோத் நின்றால் வேலை செய்யமாட்டோம்’ என உடன்பிறப்புகள் கதவடைப்பு செய்தனர். கல் குவாரி, மணல் கொள்ளை அதிருப்தியோடு மீண்டும் காந்தியே களமிறங்கியுள்ளார். பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., தரப்பிலிருந்து வரும் வலுவான நிதி உதவி, காந்தியின் வெற்றியைத் திண்டாட்டமாக்கி உள்ளது.
திட்டக்குடி: சி.வெ.கணேசன்
அமைச்சர் சி.வெ.கணேசன் வி.சி.க., நிர்வாகிகளை மதிக்காததால் அவர்கள் பெயரளவிலேயே வேலை செய்கின்றனர். த.வெ.க.,வின் தாக்கத்தால் பட்டியலின ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளதால், கடைசி நேரத்தில் வி.சி.க.வை சமாதானப்படுத்த ‘பசை’ தடவிப் பார்க்கிறார் கணேசன். ஆனால், அது கைகொடுக்காது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
முதுகுளத்துார்: ராஜகண்ணப்பன்
முக்குலத்தோர் ஓட்டுகளைப் பெற்று வென்ற அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக இப்போது அதே சமூகம் திரும்பியுள்ளது. யாதவர்களும் அதிருப்தியில் உள்ளனர். தண்ணீர் பிரச்னையைத் தீர்க்காத கோபம் மக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிகிறது. அ.தி.மு.க., மற்றும் சசிகலா தரப்பு வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கைச் சமாளிக்க ராஜகண்ணப்பனிடம் வைட்டமின் ‘ப’வைத் தவிர வேறு வழியில்லை.
காங்கேயம்: சாமிநாதன்
களப்பணி செய்யாத ‘ஒயிட் காலர்’ அமைச்சரான சாமிநாதனுக்கு எதிராகச் சிவசேனாபதி, பத்மநாதன் என ஒரு டஜன் நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்க்கின்றனர். அ.தி.மு.க., நடராஜின் செல்வாக்கும், த.வெ.க., பிரிக்கும் கவுண்டர் ஓட்டுகளும் சாமிநாதனுக்குப் பெரும் வேட்டாக அமையும்.
திருச்சுழி: தங்கம் தென்னரசு
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிர்வாகிகளுக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாதவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் விருந்து வைக்கும் இவரை நம்பாமல், நிர்வாகிகள் கைகழுவிவிட்டனர். இதனால் தனது மனைவி மற்றும் சகோதரியை வைத்துப் பிரசாரம் செய்கிறார். அ.தி.மு.க., வேட்பாளர் ராஜவர்மனின் தீவிரத்தை முறியடிக்க அ.தி.மு.க.,வினரிடமே ‘டீல்’ பேசுகிறார் அமைச்சர்.
மதுரை மத்தி: பி.டி.ஆர்
ஊழலற்றவர் என்ற பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பிம்பம், வரி ஏய்ப்புப் புகாரில் அவரது உதவியாளர்கள் கைதானதில் உடைந்துவிட்டது. ‘ஒயிட் காலர்’ அமைச்சரான அவர் மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சுந்தர்.சி.,யின் எதார்த்தமான பிரசாரம் மற்றும் ஏ.சி.சண்முகத்தின் செலவு ஆகியவற்றை ஈடுகொடுக்கத் தியாகராஜன் மறுப்பதால், அவரது வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.
பசை தடவி இருந்தாலும், வைட்டமின் ‘ப’வை இறக்கி இருந்தாலும் மக்களின் ‘ஆக்ரோஷ’ அலைக்கு முன்னால் இந்த அமைச்சர்கள் காணாமல் போவது உறுதி என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
