தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அந்த ‘மேஜிக்’ நாள் வந்துவிட்டது. ஏப்ரல் 23-ம் தேதி பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன. கடந்த ஒரு மாத காலமாகத் தமிழக மக்களின் மனங்களில் நிலவி வந்த “அடுத்த முதல்வர் யார்?” என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு நாளை மதியம் விடை கிடைத்துவிடும். 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், கோட்டைக்குச் செல்லப்போவது யார் என்பது சஸ்பென்ஸாகவே நீடிக்கிறது.

இருப்பினும், தற்போதைய சூழலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தமிழக அரசியல் வரலாறு காணாத ஒரு புதிய நெருக்கடியைச் சந்திக்கும். ஆம், அதுதான் ‘தொங்கு சட்டசபை’!

118 எட்ட முடியாத இலக்கா?
தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட வேண்டும். ஆனால், இம்முறை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாகச் சீமானின் நாம் தமிழர் கட்சியும், முதல்முறையாகக் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் வாக்குகளைப் பிரிக்கும் ‘எக்ஸ்-ஃபேக்டராக’ உருவெடுத்துள்ளன. எக்ஸிட் போல் முடிவுகள் ஒருபுறம் தி.மு.க.வையும், மறுபுறம் அ.தி.மு.க.வையும் முன்னிலைப்படுத்துவதால், எந்த ஒரு கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆளுநர் எனும் அதிகாரம்: லகான் யாரிடம்?
ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில், ஆளுநரின் அதிகாரமே உச்சகட்டமாக மாறும். 118 இடங்களை எந்தக் கூட்டணியும் எட்டவில்லை என்றால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது முழுக்க முழுக்க ஆளுநரின் ‘தன்விருப்ப அதிகாரம்’ சார்ந்தது.

சர்க்காரியா கமிஷன் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளின்படி சில பரிந்துரைகள் இருந்தாலும், இறுதி முடிவை எடுப்பதில் ஆளுநரே ‘கிங் மேக்கர்’ ஆக இருப்பார். தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணிக்கு முதலிடம் தரப்படலாம். மெஜாரிட்டி இல்லாவிட்டாலும், அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியை ஆளுநர் அழைக்கலாம்.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி
:இதுதான் மிகவும் ஆபத்தானது. முடிவுகள் வெளியான பின், ஆட்சி அமைக்கப் பல கட்சிகள் கைகோர்த்து ஆளுநரிடம் உரிமை கோரினால், அந்தத் தரப்புக்கு வாய்ப்பு தரப்படலாம்.

குதிரைப் பேரமும்… 15 நாள் கெடுவும்!
ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைத்தாலும், அவர் 15 நாட்களுக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்த 15 நாட்கள் தான் தமிழக அரசியலின் ‘க்ளைமாக்ஸ்’ ஆக இருக்கும். மெஜாரிட்டி இல்லாத கட்சிகள், சிறு கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்க ‘குதிரைப் பேரங்களில்’ ஈடுபட வாய்ப்புள்ளது. கூட்டணித் தலைவர்கள் ஏற்கனவே ‘கம்பி நீட்ட’த் தயாராகி வருவதாகத் தகவல்கள் கசியும் நிலையில், இந்த 15 நாட்கள் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் பேரங்கள் அரங்கேறும் இடமாக மாறும்.

ஆளுநரின் ‘லகான்!
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, “யாரால் நிலையான ஆட்சியைத் தர முடியும்” என்று ஆளுநர் கருதுகிறாரோ, அவரை அவர் அழைக்கலாம். இதுவே பல நேரங்களில் சர்ச்சைகளுக்கு வித்திடுகிறது. ஆளுநர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் எனத் தோன்றினால், அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை நாடலாம். கடந்த காலங்களில் பல மாநிலங்களில் இத்தகைய சூழலில் நள்ளிரவில் நீதிமன்றக் கதவுகள் தட்டப்பட்ட வரலாறுகள் உண்டு.

நாளை வெளியாகப்போகும் முடிவுகளில் ஒரு கட்சிக்குத் தெளிவான பெரும்பான்மை கிடைத்துவிட்டால் அது தமிழகத்திற்குச் சுபம். மாறாக, இழுபறி நிலை உருவானால், ராஜ் பவனில் இருந்து வெளிவரும் ஒரு கடிதமே தமிழகத்தின் அடுத்த முதல்வரைத் தீர்மானிக்கும். ஆளுநர் கையில் ‘லகான்’ செல்லும் அந்தச் சூழல், தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் சந்தேகமே இல்லை.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *