Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

mla-ilayaraja

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு தமிழக அரசியலில் அதிகம் உற்று நோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாகிவிட்டது ஊத்தங்கரை.

அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ என்.இளையராஜாவின் நெருங்கிய நண்பரும், தவெக நிர்வாகியுமான ஆத்திம் (28) நேற்று இரவு காரில் வந்த மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தையே பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது

.நடந்தது என்ன? ஊத்தங்கரைத் தொகுதியில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க பொறுப்பு அமைச்சர் கீர்த்தனா வரவிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, எம்.எல்.ஏ இளையராஜா வீட்டில் புதன்கிழமை மாலை தவெக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது.

கூட்டம் முடிந்து இரவு சுமார் 8.30 மணியளவில், கலைஞர் நகரைச் சேர்ந்த ஆத்திம் தனது டூவீலரில் வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து வந்த கார், டூவீலர் மீது மோதியிருக்கிறது. நிலைதடுமாறி கீழே விழுந்த ஆத்திமை, காரிலிருந்து இறங்கிய நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார்.

கையால் தடுத்ததில் அவரது கையில் பலத்த வெட்டு விழுந்திருக்கிறது. ஆத்திமின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் உடன் வந்த தவெக-வினர் விரைந்து வர, காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறது

இதையும் படியுங்க  பழனி நிலமோசடி வழக்கில் பயங்கர திருப்பம்... கைதான முக்கிய நபர் உயிரிழப்பு... சிறையில் நடந்தது என்ன?

.ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு முதலில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவலறிந்து எம்.எல்.ஏ இளையராஜாவே நேரில் வந்து பார்த்துச் சென்றிருக்கிறார்.

Oplus_16908288

பெட்ரோல் பங்க் அருகே கிடந்த அரிவாள்கள்!

இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் போச்சம்பள்ளி செல்லும் சாலையில் கொடமாண்டப்பட்டி அருகே பெட்ரோல் பங்கை ஒட்டிய காலி நிலத்தில் கத்தி, அரிவாள்கள், கையுறை, ஜெர்கின், ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் கிடப்பதைப் பொதுமக்கள் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் அவற்றைக் கைப்பற்றி, இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதா ? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார் கைப்பற்றிய அந்த ஆயுதங்கள்தான். திட்டமிட்டு, முன்கூட்டியே தயாராக வந்த கும்பல் என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் உள்ளூர் போலீஸார்.

பின்னணியில் யார்? – 3 கோணங்கள்!

1. எம்.எல்.ஏ-வை மிரட்டும் முயற்சியா?இதுதான் அதிகம் பேசப்படும் கோணம். ஏற்கெனவே தவெக எம்.எல்.ஏ-க்களிடம் ரூ.35 கோடி குதிரைப் பேரம் நடத்தியதாகப் புகார் கொடுத்தவர் இளையராஜா. ‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற குறியீட்டுப் பெயரில் நடந்த அந்தப் பேரம் தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பலரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கமானவர் தாக்கப்பட்டிருப்பது, அவரை மிரட்டுவதற்காக நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  "அதிமுக எங்க சொத்து.. தவெக வதந்திக்கு முற்றுப்புள்ளி!" - ஆவேசமாகப் பேசிய எஸ்பி வேலுமணி!

2. உட்கட்சிப் பூசலா?அமைச்சரின் நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பான கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது தாக்குதல் நடந்திருப்பதால், கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது முன்விரோதம் காரணமா ? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது

3. தொழில் போட்டியா? தாக்குதலுக்கு உள்ளான ஆத்திம் டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். அவரது தொழில் எதிரிகள் யாரேனும் இதைச் செய்திருக்கலாமா என்ற கோணத்தையும் போலீஸார் விட்டுவைக்கவில்லை.

தாக்குதல் நடத்திய கும்பல் காரில் வந்தது, முகத்தை மறைத்திருந்தது, ஆயுதங்களை வழியில் வீசிச் சென்றது என அனைத்தும் திட்டமிட்ட கொலை முயற்சியைக் காட்டுவதாகவே போலீஸ் வட்டாரங்கள் கருதுகின்றன.

ஊத்தங்கரை சம்பவம் தொடர்பாக போலீஸாரின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட அரிவாள்களில் உள்ள கைரேகைகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வைத்து குற்றவாளிகளை நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 hours ago at 5 hours ago