Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

DMK Candidat

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சௌ. சுகன்யா பேசிய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தாராபுரம் தனித் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞரும், திமுக மகளிர் அணி நிர்வாகியுமான சௌ. சுகன்யாவை செப்டம்பர் 9-ஆம் தேதி முறைப்படி அறிவித்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுகன்யா, தமிழக சட்டமன்றத்திற்குள் தகுதி இல்லாதவர்கள் நுழைகிறார்கள் என்ற தொனியில் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அப்போது, “ஒரு வார்த்தை கூட படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் தற்போது சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். நிறைய விஷயங்கள் பேச வேண்டியுள்ளது. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்ற பிறகு முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து மக்களுக்காக நிறைய பேசுகிறேன். நிச்சயமாக வெற்றி வேட்பாளராக வருவேன். வெற்றிக்கனியை தலைமைக்கு சேர்க்க வேண்டும்” என்று சுகன்யா தெரிவித்தார்.

மேலும், “தற்போது சட்டமன்றம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். நிறைய விஷயங்கள் பேச வேண்டியுள்ளது. நிச்சயமாக சென்னையிலிருந்து திரும்பி வந்து பேசுகிறேன்” என்றும் அவர் கூறினார். அவரது இந்தப் பேச்சு தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை குறிப்பாகக் குறிவைத்து பேசப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  பாஜகவின் மாஸ்டர் மூவ்..! திமுக- திரிணாமுல் ஆதரவு..! அடித்து ஆடும் அமித் ஷா..!

தாராபுரம் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பி. சத்தியபாமா வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதே பி. சத்தியபாமாவையே தவெக மீண்டும் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

இதனால் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என மூன்று கட்சிகளும் களமிறங்கியுள்ளதால், தேர்தல் களம் முக்கியமான மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதியை விமர்சிக்கும் வகையில் திமுக வேட்பாளர் சுகன்யா பேசியிருப்பது, தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்பே அரசியல் வட்டாரத்தில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் தனித் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சௌ. சுகன்யாவுக்கு 33 வயது. இவர் திருப்பூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கோவை சட்டக் கல்லூரியில் எம்.ஏ., பி.எல். படிப்பை முடித்துள்ள அவர், தாராபுரம் மற்றும் கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

இதையும் படியுங்க  "சட்டசபை ‘லைவ்’.. மெகா சீரியலை விட மோசம்!" - நெட்டிசன்களின் ரீல்ஸ் கன்டென்ட்டாக மாறிய தமிழ்நாடு அசெம்பிளி!

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பொறுப்பு வகித்து வரும் சுகன்யா, கட்சியில் இணைந்தபோது முதலில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்சிப் பணிகளில் தீவிரமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வந்ததையடுத்து, தற்போது மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுகன்யாவின் கணவர் மணிவாசகம், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். சுகன்யா – மணிவாசகம் தம்பதியருக்கு ஆறு வயதில் அக்ஷயா என்ற பெண் குழந்தை உள்ளது. இதன் மூலம் சுகன்யா தீவிரமான திமுக குடும்பப் பின்னணியைக் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே, சுகன்யா சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இப்போது சட்டமன்றம் எப்படி நடக்கிறது என்பதை மக்கள் பார்க்கிறார்கள். நான் சென்னையிலிருந்து வாழ்த்து பெற்றுத் திரும்பியதும், இன்னும் பல விஷயங்களை முறையாகவும் விரிவாகவும் பேசுகிறேன்” என சவால் விடும் தொனியில் கூறியிருந்தார்.

இதையும் படியுங்க  மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் `செக்' - சூடாகும் திருப்பத்தூர் திமுக !

சுகன்யாவின் “ஒரு வார்த்தை கூட படிக்கத் தெரியாதவர்கள் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்” என்ற கருத்து வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. படித்த, சட்டம் பயின்ற ஒரு இளம் பெண் தாராபுரம் தொகுதிக்கு வேட்பாளராக வந்திருப்பது தொகுதிக்கு நல்லது என திமுகவினர் இந்தப் பேச்சை ஆதரித்து பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், “படித்தவர்கள் மட்டும்தான் நல்லாட்சி தருவார்களா? அதிகம் படிக்காத காமராஜர் தமிழகத்திற்குச் செய்த சாதனைகளை மறந்துவிட்டீர்களா?” எனக் கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினரும் தவெக ஆதரவாளர்களும் சுகன்யாவுக்கு இணையத்தில் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

திமுக, அதிமுக மற்றும் தவெக என மூன்று முக்கிய கட்சிகள் நேரடியாகக் களமிறங்கியுள்ளதால், தாராபுரம் இடைத்தேர்தல் மக்கள் மத்தியில் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மேலும், திமுக வேட்பாளர் சௌ. சுகன்யாவின் சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சித்த பேச்சு தேர்தல் களத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளதால், வரும் நாட்களில் தாராபுரம் தொகுதி அரசியல் ரீதியாக மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 hours ago at 23 hours ago