தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரத்யேக இருக்கையில் அமராமல், அமைச்சர்கள் அமரும் முன்வரிசை இருக்கைக்குத் திடீரென இடம் மாறி அமர்ந்தது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாகவே சட்டப்பேரவையில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையே கடுமையான விவாதங்கள், கூச்சல் மற்றும் குழப்பங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் விஜய், ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அமரும் முன்வரிசைக்குச் சென்றார்.
அங்கு அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இடையே முதலமைச்சர் விஜய் அமர்ந்துகொண்டார். அவையில் நிலவி வந்த பரபரப்பைக் கட்டுப்படுத்தவும், தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக வழிநடத்தவும் அவர் முன்வரிசைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்தவும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் போது அவர்களுக்கு ஆதரவாக இருக்கவும் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த இருக்கை மாற்றத்திற்குப் பின்னால் அன்றைய சட்டப்பேரவை சூழலும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் அவையில் பேசும்போது, கடந்த இரண்டு, மூன்று நாட்களாக சட்டப்பேரவையில் சண்டை, கூச்சல் மற்றும் குழப்பங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து பேசிய பிறகு எதிர்க்கட்சிகளின் சலசலப்பும், விவாதமும் தீவிரமடைவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், தனது அமைச்சர்களுக்கு தைரியம் அளிக்கவும் முதலமைச்சர் விஜய் முன்வரிசைக்கு வந்ததாகத் தெரிகிறது.

அப்போது அவையில் சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பல்வேறு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துகொண்டிருந்த நிலையில், அமைச்சர்கள் வரிசையில் அமர்ந்த முதலமைச்சர் விஜய், துறை சார்ந்த விவகாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து அமைச்சர்களுடன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
பொதுவாக தமிழக முதலமைச்சர்கள் சட்டப்பேரவையில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்துவது வழக்கம். ஆனால், அந்த நடைமுறையை மாற்றி அமைச்சர்கள் அமரும் வரிசையில் விஜய் அமர்ந்தது, அவையில் இருந்த உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக, ஆளுங்கட்சி வரிசையின் முதல் பெஞ்சில் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே அமைச்சர் அருண்ராஜ் அமரும் இருக்கை உள்ளது. முதலமைச்சர் விஜய் முன்வரிசைக்கு வந்தபோது, அமைச்சர் அருண்ராஜுக்கான அந்த இருக்கையிலேயே அமர்ந்துகொண்டார்.
விஜய் அங்கு அமர்ந்ததும், அவருக்கு அருகில் இருந்த மூத்த அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், அவருடன் நீண்ட நேரம் தீவிரமாக ஆலோசனை நடத்தினார். இருவரும் அவை நடவடிக்கைகளுக்கு இடையே கோப்புகளைப் பார்த்துக்கொண்டும், முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடிக்கொண்டும் இருந்த காட்சிகள் கேமராக்களில் பதிவாகின.
இதனிடையே, தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு தார்மீக ஆதரவு வழங்கும் நோக்கத்திலும், அவையில் நிலவும் சலசலப்பைக் குறைக்கும் வகையிலும் விஜய் அவருக்கு அருகில் அமர்ந்ததாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் வழக்கமான நடைமுறையைத் தாண்டி அமைச்சர்கள் மத்தியில் வந்து அமர்ந்ததைப் பார்த்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆச்சரியத்துடன் புன்னகைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், எந்தவித ஆக்ரோஷமும் இன்றி மிகவும் அமைதியாகவும், சக அமைச்சர்களுடன் இயல்பாகவும் விஜய் அமர்ந்திருந்த காட்சி, ஏற்கனவே அனல் பறந்துகொண்டிருந்த சட்டப்பேரவை சூழலை ஓரளவு தணித்ததாகவும் கூறப்படுகிறது.
தனது பிரத்யேக இருக்கையைத் தவிர்த்து அமைச்சர்கள் வரிசையில் முதலமைச்சர் விஜய் திடீரென அமர்ந்த சம்பவம், சட்டப்பேரவையில் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
