Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த ஆட்சி குறித்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் இதனை புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வரவேற்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட வாட்ஸ்அப் புகார் எண், கணினிமயமாக்கப்பட்ட சேவைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் ‘STING’ நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தற்போது பல்வேறு முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளதாகவும், பல நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க முன்வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

717 டாஸ்மாக் கடைகள் மூடல்

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய நடவடிக்கை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் உள்ளிட்ட ‘வெற்றி’ திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

“வாக்குறுதிகள் நிறைவேறவில்லை” – மக்கள் அதிருப்தி

அதேநேரத்தில், முந்தைய அரசுகளின் திட்டங்களுக்கு ‘வெற்றி’ என புதிய பெயர் அல்லது ஸ்டிக்கர் ஒட்டி, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதிலேயே அரசு அதிக கவனம் செலுத்துவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், மூன்று மாத ஆட்சிக்காலத்திலேயே அரசு அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாகவும், விவசாயக் கடன்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்றும் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  திமுக கூட்டணியை உடைக்கணும்.. பாஜக-வை சிதைக்கணும்.. விஜய் போடும் மெகா ஸ்கெட்ச்..!

“இலவசப் பேருந்து பயணம், சிலிண்டர் திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை”

“மகளிருக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவசப் பயணத் திட்டம் என முதலில் கூறினார்கள். ஆனால், அந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்தபோதும் அதுகுறித்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லை.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. மழையும் பெய்யவில்லை. விவசாயிகள் அனைவரும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலவச மின்சாரத் திட்டம் குறித்தும் அறிவித்தார்கள். ஆனால், அது அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து முறையாக மின்சாரம் கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கூறிய திட்டமும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இப்படி பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே” என்றார்.

“100 நாள் வேலை கிடைத்திருப்பது நன்மை” –

மற்றொரு பெண் கூறுகையில், “விஜய் ஆட்சி நன்றாக இருக்கிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 முதல் 25 நாட்கள் வரை வேலை பார்த்துள்ளனர். இது நல்ல திட்டமாக இருக்கிறது” என்றார்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து அதிருப்தி

விவசாயிகள் குறித்து பேசிய ஒருவர், “தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றதில் இருந்து, இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு 6.35 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 4.39 லட்சம் ஏக்கர் அளவில்தான் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதற்கு வரவேற்பு

ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த ஒருவர், “இந்த ஆட்சி எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. டாஸ்மாக் கடைகளைக் குறைத்திருப்பதை மிகவும் வரவேற்கிறோம். டாஸ்மாக் கடைகளைத் தனியாருக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளையும் வரவேற்கிறோம்.

இதையும் படியுங்க  "பழனி முருகன் சொத்தை தொட்டதால் அதிரடி வேட்டை: சிபிசிஐடி போட்ட சீல்... சிக்கிய 50 ஆவணங்கள்; கதறும் முக்கிய புள்ளிகள்!"

எங்கள் வீட்டுக்கு அருகிலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

தற்போது பல்வேறு முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. பல நிறுவனங்கள் இங்கு வர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

“விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்”

மற்றொரு பொதுமக்கள் கூறுகையில், “இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றுதான் மக்கள் தவெக-வுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால், மக்கள் பயன்பெறும் வகையில் சில விஷயங்களில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறினார்கள். ஆனால், முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் பாதியளவிலேயே நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது. முழுமையாக விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு” என்றார்.

டெல்டாவில் தண்ணீர் பிரச்சினை

அவர் மேலும் கூறுகையில், “டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல், மழையும் பெய்யாமல் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பியிருக்கிறார்கள். ஆனால், அந்த வேலைவாய்ப்பும் கிடைக்காத நிலையில் மக்கள் எப்படி வாழ்வது?

குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. அதிகாரிகள் நிதி இல்லை, நிதி ஒதுக்கீடு இல்லை எனக் கூறுகின்றனர். தண்ணீரே இல்லாமல் மனிதர்கள் எப்படி வாழ முடியும்? முதலில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்பட்டால் எங்களுக்கு மனநிறைவு ஏற்படும்” என்றார்.

“பெண்கள் பாதுகாப்பில் மாற்றம் தெரிகிறது”

“100 நாட்களில் தவெக ஆட்சியில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களைப் பார்த்தால், லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் வெளியே சென்று வருவதில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

இதையும் படியுங்க  விஜய் நெற்றியில் குங்குமம்..! உதயநிதி நேரடி அட்டாக்..! கண்டும் காணாத தவெக எம்.எ.ஏ-க்கள்..!

வீட்டுக்கு அருகிலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்கள் .

தனியார் பள்ளிகளின் கட்டண வெளிப்படைத்தன்மைக்கும் வரவேற்பு, “தனியார் பள்ளிகளில் கட்டண ரசீதுகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதும் நல்ல நடவடிக்கை.

இதுவரை எந்தக் கட்சியாலும் முழுமையாகச் செய்ய முடியாத பெண்கள் பாதுகாப்பு, லஞ்சம் உள்ளிட்ட விஷயங்களில் தவெக அரசு கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.அனைவரும் இந்த ஆட்சியை வரவேற்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்கள்.

100 நாட்களில் முழுமையான மதிப்பீடு சாத்தியமா?

ஒரு புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் என்பது மிகவும் குறுகிய காலம் என்பதால், இப்போதே ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து முழுமையான முடிவுக்கு வர முடியாது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

முதலீட்டு மாநாடுகள் மூலம் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை வேலைவாய்ப்புகளாக மாற்றுவதிலும், மாநிலத்தின் கடன் சுமையைக் குறைப்பதிலும் தான் இந்த அரசின் உண்மையான வெற்றி அடங்கியிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

புதிய தொடக்கமா? எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

மொத்தத்தில், தவெக அரசின் முதல் 100 நாள் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் ஒருபுறம் வரவேற்பும், மறுபுறம் அதிருப்தியும் நிலவி வருகிறது.

பெண்கள் பாதுகாப்பு, டாஸ்மாக் கடைகள் மூடல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான முயற்சிகள் பாராட்டப்பட்டாலும், விவசாயக் கடன் தள்ளுபடி, தண்ணீர் பிரச்சினை, மின்சாரம், இலவச சிலிண்டர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதனால், முதலமைச்சர் விஜயின் முதல் 100 நாள் ஆட்சி மக்களுக்கு ஒரு “புதிய தொடக்கம்” என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில், தங்களது அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago