Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

CM Vijay

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்’ என்று மு.க.ஸ்டாலின் பகீரங்கமாக குற்றஞ்சாட்டினார். ஆனால், விஜய் மக்கள் முன் நடிப்பது கூட இல்லை, மக்களை முற்றிலுமாக ஏமாற்றுகிறார்.

ஆம், அரசில் நடக்கும் தவறுகள், டெண்டர்களில் நடக்கும் ஊழல்கள் குறித்து ஆர்.டி.ஐ. மூலமாகத்தான் தகவல்களை பெற்று வந்தோம். தற்போது, அதற்கே மூடுவிழா நடத்தியிருக்கிறார் முதல்வர் விஜய்! “வெளிப்படையான நிர்வாகம் தருவோம், ஊழலை ஒழிப்போம், சாமானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்” என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அதிகாரத்தின் முதல் கோடரியை மக்கள் உரிமையின் மீதே வீசியிருப்பது வேதனையின் உச்சம்.

தமிழக அரசின் பொதுத்துறையின் கீழ் இயங்கும் பொது சட்டம் – ஒழுங்கு துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) இருந்து முழு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை, ஜனநாயக அமைப்பிற்கே விடப்பட்ட வெளிப்படையான சவாலாகும். RTI சட்டப் பிரிவு 24(4)-ஐப் பயன்படுத்தி, சட்டம் ஒழுங்கு துறையை உளவு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அமைப்பு என்று அரசு அறிவித்திருக்கிறது. இது வெறும் நிர்வாக நடைமுறை மாற்றம் அல்ல; சாமானிய மக்களின் கைகளில் இருந்த மிக வலிமையான ஜனநாயக ஆயுதத்தை அரசு தந்திரமாகப் பிடுங்கி எறிந்துள்ள கொடுஞ்செயல்.

இதையும் படியுங்க  "எங்கள் மண்ணை விட்டு நகர மாட்டோம்!" – மேகமலை விவகாரத்தில் 98 கிராம மக்களின் ஆக்ரோஷ போராட்டம்: CM விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை!
RTI

ஒரு அரசாங்கம் எப்போது மக்களின் கேள்விகளுக்கு அஞ்சத் தொடங்குகிறதோ, அப்போதே அது சர்வாதிகாரத்தின் பாதையில் நடைபோடத் தொடங்கிவிட்டது என்று பொருள். இந்த உத்தரவு முற்றிலும் தவறானது என்பதற்கான காரணங்கள் இதோ:இந்திய ஜனநாயகத்தில் ஒரு ஏழைக்கோ, எளிய விவசாயிக்கோ, அதிகார பலம் இல்லாத சாமானியனுக்கோ அநீதி இழைக்கப்பட்டால், காவல் நிலையம் அல்லது அரசு அலுவலகத்தில் நியாயம் கேட்க உதவிய ஒரே சட்டப்படியான வழி RTI. “என் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏன் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை? கைது செய்யப்பட்டவரை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை?” போன்ற அடிப்படை கேள்விகளுக்கு காவல் துறையினரைப் பதிலளிக்க வைத்தது இந்தச் சட்டம். இப்போது இந்தத் துறையையே RTI-லிருந்து தூக்கி எறிந்துவிட்டால், சாமானியன் யாரிடம் போய் நியாயம் கேட்பான்?

காவல்துறை என்பது சட்டத்தைக் காக்கும் அமைப்பு.. ஆனால் அவர்களே வரம்பு மீறும்போது அவர்களைக் கட்டுப்படுத்துவது எது? லாக்கப் மரணங்கள் போலி என்கவுண்டர்கள் போராட்டக்காரர்கள் மீதான தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு உத்தரவுகள் பொய் வழக்குகள் போட்டு நலிந்தவர்களை சிறையில் அடைப்பது இவை எல்லாமே சட்டம் ஒழுங்கு துறையின் கண்காணிப்பில் நடப்பவை. இந்த விவரங்களை அரசு ரகசியமாக மூடி வைத்தால், காவல்துறையினர் செய்யும் சட்டவிரோத செயல்கள், லஞ்ச லாவண்யங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் வெளி உலகிற்குத் தெரியாமலேயே புதைக்கப்பட்டுவிடும். இது காவல்துறையை மக்கள் சேவகர்களாக மாற்றுவதற்குப் பதிலாக, கேள்வி கேட்க முடியாத ஒரு அதிகார வர்க்கப் படையாக மாற்றிவிடும்.

இதையும் படியுங்க  ஆளுநர் மாளிகை கொடுத்த நெருக்கடி.. அம்பலப்படுத்திய தவெக!
Republic Tamil

ராணுவ உளவு அமைப்பு அல்லது எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு RTI-லிருந்து விலக்கு அளிப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், தினசரி மக்களின் அமைதி, பொதுப் போக்குவரத்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது அமைதியைக் கையாளும் சட்டம் ஒழுங்கு துறையை உளவு அமைப்பு என்று முத்திரை குத்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை. இதுவரை சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவை பொது ஆவணங்களாக இருந்தன. இப்போது அதையெல்லாம் மூடி மறைப்பதன் மூலம், அரசு எதை மறைக்கத் துடிக்கிறது? தன் நிர்வாகத் தோல்விகளையா அல்லது காவல்துறையின் தவறுகளையா?

அரசியலுக்கு வரும்போது “நாங்கள் பழைய அரசியல்வாதிகளைப் போல இல்லை.. நாங்கள் புதிய அரசியல் செய்வோம்.. ஊழலற்ற வெளிப்படையான தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்று வாக்குறுதி கொடுத்ததுதான் விஜய் அரசு. ஆனால், ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே, பொதுமக்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது இரட்டை வேடத்தின் அடையாளம். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் பழைய அதே அதிகார போதை தலைக்கேறி, மக்களைத் தூர நிறுத்தும் அதே வழக்கமான அரசியல் அணுகுமுறையைத்தான் இந்த அரசும் கையில் எடுத்துள்ளது என்பதற்கு இந்த அரசாணையே அசைக்க முடியாத சாட்சி.

இதையும் படியுங்க  ”சூலூரில் தவெக MLA-வை சிறைபிடித்து பொதுமக்கள் கல்வீச்சுத் தாக்குதல்.. கோவையில் உச்சகட்ட பதற்றம்!"

தமிழக அரசின் புதிய அரசாணை கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. எனவே அன்றைய தேதியில் இருந்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தால் பதில் கிடைக்காது. இனிமேல் கேள்வி எழுப்பவும் முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago