இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வழங்கிய சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகின்றன.
கோவிட்-19 காலத்தில் இருந்ததைப் போல இயன்றவரை வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை (Work From Home) பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அவசியமான சூழலில் தனிப்பட்ட வாகனங்களை விட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் பரவின. மேலும், ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்ப்பது நாட்டின் பொருளாதார நலனுக்குப் பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், நாடு மீண்டும் லாக்டவுன் நோக்கி நகருகிறதா தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்குமா தங்கத்தில் முதலீடு செய்தவர்களின் நிலை என்ன ஆகும். இது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள முதலில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Foreign Exchange Reserve) குறித்து அறிந்துகொள்ள வேண்டும். ஒரு நாடு வெளிநாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கும், இறக்குமதி–ஏற்றுமதிகளை மேற்கொள்ளவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தேவையான டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு நாணயங்களும், தங்கச் சேமிப்புகளும் சேர்த்து வைத்திருப்பதே அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகும். இதை ஒரு குடும்பத்தின் சேமிப்புத் தொகையுடன் ஒப்பிடலாம்.
இந்த கையிருப்பு, இந்திய ரூபாயின் மதிப்பை நிலைத்தன்மையுடன் வைத்திருக்கவும், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாக இருந்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் உயரும்.
நாடு சம்பாதிக்கும் வெளிநாட்டு வருமானத்தை விட செலவழிக்கும் தொகை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதி உயர்வைக் குறிப்பிடுகின்றனர்.
மேற்காசியப் பகுதிகளில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால், தங்க இறக்குமதியும் உயர்ந்துள்ளது. உலகளவில் தங்கத்திற்கான மொத்த தேவையில் சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை இந்தியாவின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. 2025–26 நிதியாண்டில், முந்தைய ஆண்டுகளை விட இந்தியாவின் தங்க இறக்குமதி கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, தங்க இறக்குமதியை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு நிரந்தரமானதல்ல; தற்காலிகமான சந்தை எதிர்வினையாக இருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒரு ஆண்டுக்கு மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்தால், சிறு அளவிலான நகைக்கடைகள் மற்றும் தங்க வியாபாரிகள் பாதிக்கப்படக்கூடும். தங்க விற்பனை மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் பணிபுரிபவர்களுக்கும் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில், உலகளவில் தங்கத்தின் தேவை குறைய வாய்ப்பு இருந்தாலும், இந்தியாவில் உள்ளூர் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இத்தகைய அறிவுறுத்தல்கள் உடனடியாக லாக்டவுன் அமல்படுத்தப்படவுள்ளது என்பதற்கான அறிகுறி அல்ல என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழலில் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், இறக்குமதி செலவுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவே பார்க்கப்படுகிறது.
எனினும், மேற்காசியப் போர் சூழ்நிலை மேலும் தீவிரமடைந்தால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தையும் இந்தியாவின் இறக்குமதி செலவுகளையும் பாதிக்கக்கூடும். எனவே, எதிர்கால நிலைமை சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களைப் பொறுத்தே அமையும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
