Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை, “இது அவசியமா?” என்று கேட்டு தடுத்து நிறுத்தியதே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் என்று முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, மாநில அரசின் தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் அரசு வழங்கும் கார்களை ஏற்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, “அரசு கஜானாவில் பணமில்லை என்று கூறி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என்கிறீர்களே; அப்படியானால் கலைஞருக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மட்டும் நிதி இருந்ததா?” என அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த எ.வ. வேலு, கலைஞரின் நினைவாக பேனா சிலை அமைக்க வேண்டும் என இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தார். வங்கக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கோப்புகளை எடுத்துச் சென்றபோது, “நமக்கு இந்தப் பேனா சிலை அவசியமா?” என்று முதலில் கேள்வி எழுப்பியதே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்க  "கோட்டையில் கொடியேற்றம்… எல்லையில் தவெக கீதம்! தளபதியின் இரட்டை ஆட்டம்!" பின்னணியில் நடந்தது என்ன?!"

மேலும், தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியாக இல்லாத நேரத்தில், பொதுமக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து கடலில் பிரம்மாண்டமான சிலை அமைப்பதற்குப் பதிலாக, கலைஞர் நினைவிட வளாகத்திற்குள்ளேயே எளிய முறையில் நினைவுச் சின்னத்தை அமைக்கலாம் என்று முடிவு செய்ததும் மு.க. ஸ்டாலின்தான் என எ.வ. வேலு விளக்கம் அளித்தார்.

டெல்லி வரை சென்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்ற பின்னரும், பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு திட்டத்தைத் தவிர்க்கலாம் என்று கூறி அதனை மாற்றியமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், சென்னை மெரினா கடலில் சுமார் ₹81 கோடி மதிப்பீட்டில் 134 அடி உயரத்தில் ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், கடலில் நினைவுச் சின்னம் அமைப்பதால் கடல்சார் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம்,

ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படலாம், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி உள்ளிட்ட அம்சங்களைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், தொடர்புடைய வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.

இதையும் படியுங்க  ஏழைக் குழந்தைகளின் முட்டையைக் கூட விட்டுவைக்கவில்லையே..! திமுக-வின் அபார ஊழல்..! அதிர்ந்த முதல்வர் விஜய்..!

இதற்கிடையே, 2023-ஆம் ஆண்டு பேனா நினைவுச் சின்னத் திட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தபோது, மு.க. ஸ்டாலின் திட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய பழைய பேச்சுகளும் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன.

“கலைஞர் எப்போதெல்லாம் தனது பேனாவைக் கீழே வைக்கிறாரோ, அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்து நின்றது; அந்தப் பேனாதான் தமிழ்ச் சமூகத்தின் தலையெழுத்தையே மாற்றியது” என்று அவர் பேசியதாகக் குறிப்பிடப்படுகிறது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்தை எதிர்த்தவர்களை விமர்சித்து

முரசொலியில் வெளியான பழைய தலையங்கமும் 2023-ல் பேனா சிலைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில், “கலைஞரின் பேனா வடிவச் சின்னத்தை உண்மையான தமிழனும், நன்றியுணர்வு உள்ள மனிதனும் மட்டுமே ஒப்புக்கொள்வான். மூளையை முடக்குவாதத்திற்கு அடமானம் வைத்தவர்கள் மட்டுமே எதிர்ப்பார்கள்” எனக் கடுமையான தலையங்கம் வெளியானது தற்போது விவாதமாகியுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியினரும் நெட்டிசன்களும், ஆரம்பத்தில் திட்டத்தை தீவிரமாக ஆதரித்துவிட்டு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள் காரணமாகவே அரசு பின்வாங்கியதாக விமர்சித்து வருகின்றனர். தற்போது அரசியல் ரீதியான விமர்சனங்களைத் தவிர்க்கும் வகையில், “முதலமைச்சரே வேண்டாம் என்று கூறினார்” என புதிய விளக்கம் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்க  நம்பாதீங்க… இதுதான் எக்ஸிட் போல்களின் 'பல்பு' வாங்கிய லேட்டஸ்ட் டாப்-5 கருப்பு தரித்திரம்..!

இந்த விவகாரத்தில் சீமானின் பழைய பேச்சும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் அதை உடைப்பேன் என்று அவர் முன்பு சவால் விடுத்திருந்தார். தற்போது அந்தத் திட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில், அரசு எதிர்ப்புகளுக்குப் பயந்துதான் பின்வாங்கியதாக சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதனால், பேனா நினைவுச் சின்னத் திட்டம் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. நிதி நிலைமை, பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மு.க. ஸ்டாலினே கடலில் பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை வேண்டாம் எனக் கூறியதாக திமுக தரப்பு விளக்கம் அளிக்கிறது.

மறுபுறம், மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளே திட்டம் மாற்றப்பட்டதற்கான முக்கியக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எ.வ. வேலுவின் தற்போதைய சட்டப்பேரவைப் பேச்சால் இந்த விவகாரம் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பான விவாதமாகியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago