Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நேரலையாக ஒளிபரப்பப்படுவது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கலவையான கருத்துகள் நிலவி வருகின்றன. நேரலை மூலம் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அவையில் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்களா என்பதை வீட்டில் இருந்தபடியே மக்கள் அறிந்துகொள்ள முடிகிறது. சட்டமன்றத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை நேரடியாகத் தெரிந்துகொள்வது தங்களது ஜனநாயக உரிமை என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், “சட்டசபை நேரலையால் எந்தப் பயனும் இல்லை” என்பதே பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முக்கியமாக வெளிப்பட்ட கருத்தாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உருப்படியான விவாதங்கள் நடைபெறுவதில்லை என்றும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதைவிட ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதற்கும் வீண் வாக்குவாதங்களுக்கும் நேரத்தை செலவிடுவதாகவும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தெளிவான பதில்களை வழங்காமல் மழுப்பலான பதில்களை அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முக்கிய விவாதங்களின்போது அல்லது எதிர்க்கட்சிகள் பேசும்போது முழுமையான நேரலை வழங்கப்படாமல், ஆளுங்கட்சிக்கு சாதகமான பகுதிகள் மட்டுமே ஒளிபரப்பப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதனால் சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களின் முழுமையான நிலவரத்தை மக்கள் அறிந்துகொள்ள முடியவில்லை என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்க  விஜய்க்கு எதிராக 10 தவெக எம்.எல்.ஏ-க்கள்? பின்னணியில் அந்த' புள்ளி..! உலுக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்!

இதற்கிடையே, சட்டமன்ற நேரலை தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. மேகதாது அணை போன்ற முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும் நேரங்களில் மட்டும் நேரலை வழங்கப்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போதோ அல்லது ஆளுங்கட்சிக்கு எதிரான காரசாரமான விவாதங்கள் நடைபெறும் போதோ நேரலை துண்டிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். “நேரலையை முழுமையாகக் காட்டாவிட்டால் அவை கூட்டுவதே வீண்” என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

நேரலை காரணமாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் (Expunged Remarks) தொடர்பாகவும் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. உறுப்பினர்கள் பேசும் தகுதியற்ற அல்லது அவதூறான வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. முன்பு அவை நடவடிக்கைகள் முடிந்த பின்னர் இதுபோன்ற கருத்துகள் நீக்கப்பட்டன. ஆனால் தற்போது நேரலை இருப்பதால், சபாநாயகர் அவற்றை நீக்குவதற்கு முன்பே அந்த வார்த்தைகளும் காட்சிகளும் பொதுமக்களைச் சென்றடைகின்றன.

இதையடுத்து, நீக்கப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் Shorts அல்லது Reels ஆக எடிட் செய்து வெளியிடக் கூடாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடுமையாக எச்சரித்துள்ளார். அவ்வாறு வெளியிட்டால் அது அவை உரிமை மீறலாக கருதப்பட்டு, உரிமைக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "3.70 லட்சம் புகார்கள்.. மின்கட்டணக் குளறுபடியால் திணறும் மக்கள்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த நெருக்கடி!"

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, கடந்த காலத்தில் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவைக்குறிப்பைத் திருத்துவதற்கு வசதியாக 30 நிமிடங்கள் தாமதமான நேரலை (Deferred Telecast) வழங்கலாம் எனப் பரிந்துரைத்திருந்தது.

அதேபோல், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைப் பின்பற்றி, சர்ச்சைக்குரிய அல்லது அவதூறான வார்த்தைகளை தானாகக் கண்டறிந்து நேரலையிலேயே Mute செய்யும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில், வழக்கமான நேரத்தைத் தாண்டி எவ்வித இடைவெளியுமின்றி தொடர்ந்து 10 மணி நேரம் சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நீண்ட நேர விவாதங்களும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், பலரும் வீட்டிலிருந்தபடியே சட்டமன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்தனர். Instagram, YouTube உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் சட்டமன்றக் காட்சிகள் புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளன.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நக்கல், நையாண்டி, வாக்குவாதக் காட்சிகளை நெட்டிசன்கள் பதிவிறக்கம் செய்து BGM சேர்த்து Reels, Shorts ஆக வைரலாக்கி வருகின்றனர். இதன்மூலம் சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் புதிய வழியும் உருவாகியுள்ளது.

இதையும் படியுங்க  5 கோடி 'ஷூட்' முடிஞ்சது..! விஜயின் ரூ.1 லட்சம் கூலிங் கிளாஸ் மேஜிக்… மேட்டூரில் சூப்பர் ஹிட் எம்ஜிஆர் பாணி செட்டப் !

இதனால், சட்டமன்ற நேரலை என்பது வெறும் செய்தி ஒளிபரப்பாக இல்லாமல், தற்போது அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கான புதிய டிஜிட்டல் களமாக மாறியுள்ளது. இருப்பினும், மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்று, அதற்கான தீர்வுகள் கிடைக்கும் போதுதான் சட்டமன்ற நேரலைக்கு உண்மையான பயன் இருக்கும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago