காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் சங்கரா பல்கலைக்கழகத்தில், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சக மாணவர்கள் கல்லூரி முன்பாகத் திரண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த நிகிதா என்ற மாணவி மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு விடுதிக்குச் சென்ற மாணவி, அதன் பின்னர் கல்லூரி வகுப்புகளுக்கும் செல்லாமல், விடுதி அறையிலிருந்தும் வெளியே வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவியின் அறை தொடர்ந்து இரண்டு நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், மாணவி கல்லூரிக்கு வராதது குறித்து விடுதி நிர்வாகம் தரப்பில் உரிய முறையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், மாணவி தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர், பூட்டப்பட்டிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, மாணவி நிகிதா தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மாணவியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை கல்லூரி நிர்வாகம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் கல்லூரி வளாகத்துக்கு வெளியே திரண்ட மாணவர்கள், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர். பின்னர், கல்லூரி வளாகத்திலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, பெண்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், மாணவியின் மரணத்திற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும், விடுதியில் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளில் 10-க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மயக்கமடைந்த மாணவிகளை சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, மாணவியின் உடலை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மாணவியின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பதற்றமான சூழல் மேலும் அதிகரித்தது. மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் நபர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? அவருக்கு ஏதேனும் மன அழுத்தம் இருந்ததா? கல்லூரி அல்லது விடுதி நிர்வாகத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், மாணவி கடைசியாக யாரிடம் பேசினார், கடந்த சில நாட்களில் அவரது நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் இருந்ததா, அவரது செல்போன் மற்றும் பிற ஆவணங்களில் ஏதேனும் தகவல்கள் உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது.
மாணவியின் மரணம் தொடர்பான உண்மையான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பவத்தில் ஏதேனும் சந்தேகத்துக்குரிய விஷயங்கள் இருந்தால் அவை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ஏற்பட்டுள்ள போராட்டம் மற்றும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவியின் தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து போலீஸ் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
