தமிழக அரசியலில் த.வெ.க தலைமையிலான புதிய அரசு அமையவிருக்கும் சூழலில், அ.தி.மு.க-வுக்குள் முன்னெப்போதும் இல்லாத வகையில் குழப்பங்கள் சூழ்ந்துள்ளன. அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு ஆதரவாளர்கள், கட்சியின் தற்போதைய நிலைக்குக் காரணம் கட்டிட தொழிலதிபர் பாஷ்யம் அபினேஷ் தான் என பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பேசிய எஸ்.பி.வேலுமணி தரப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், “சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக-வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் திட்டத்தை எங்களிடம் எடப்பாடி பழனிசாமி சொன்னார். அங்கேதான் சி.வி.சண்முகத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வார்த்தை தடித்தது. இப்படியொரு திட்டத்தை எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னதே பாஷ்யம் அபினேஷ்தான். 2017-2021 அதிமுக அரசில், ஓ.பிஎஸ் சி.எம்.டி.ஏ அமைச்சராக இருந்தபோது, அவருக்கு அறிமுகமானவர்தான் இந்த பாஷ்யம் அபினேஷ். கோயம்பேட்டில், உள்ள பாஷ்யம் அபினேஸ்ஷின் புராஜெக்ட்க்கு ஒப்புதல் வழங்கி சர்ச்சையில் சிக்கினார் ஓ.பி.எஸ். இதனால், பாஷ்யம் அபினேஷுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சிறு மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனாலும்கூட, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் பாஷ்யம் அபினேஷ்.

அடுத்துவந்த திமுக ஆட்சியில், உதயநிதியுடன் நெருக்கமாக நட்பை வளர்த்துக்கொண்டார் பாஷ்யம் அபினேஷ். டெல்லியில், அமித் ஷா மகன் ஜெய் ஷாவுடனும் நட்பை நெருக்கமாக்கிக் கொண்டவர், அமித் ஷாவின் குட் புக்கிலும் இடம்பெற்று விட்டார். இந்தத் தொடர்புகள் அவரை அபினேசசஷை பவர் சென்டராக மாற்றியது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவுகள் மீது வருமானவரித்துறை சோதனைகளை டெல்லி ஏவியது. அந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தன்னுடைய மகன் மிதுன் ரூட்டில் பாஷ்யம் அபினேஷை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இருவரும் நெருக்கமானார்கள். அபினேஷின் சிபாரிசின்படி, வருமானவரித்துறை நெருக்கடிகள் எல்லாம் தீர்ந்தன. பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பாக டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தவர் பாஷ்யம் அபினேஷ்தான். இப்படி ஆல்- இன் ஆலாக வலம் வந்த பாஷ்யம் அபினேசஷே, இப்போது அதிமுக குழப்பத்திற்கும் முக்கிய காரணம்.

2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியான நேரத்தில், தவெக-வை ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதற்கு கடுமையாக முயற்சித்தார் உதயநிதி ஸ்டாலின். அதிமுகவுக்கு வெளியிலிருந்து திமுக ஆதரவளித்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திட்டத்தையும் முன்வைத்தார் அபினேஷ். அந்தத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமியிடம் கூறி, அவரது மனதைக் கரைத்தவர் பாஷ்யம் அபினேஷ்தான். இந்தத் திட்டத்தை அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் எடப்பாடி பழனிசாமி சொன்னபோதுதான் பிரச்னையே வெடித்தது. ‘அந்த பாஷ்யம் அபினேஷுடன் சேர்ந்து ரொம்பவும் மாறிட்டீங்க. உங்களைக் கெடுத்தது பத்தாதுனு, கட்சியையும் நாசம் பண்ண ரெடியாகிட்டாரு. அவர் திட்டத்தைக் கேட்டு தி.மு.க-வோட கூட்டணி அமைச்சா, நம்ம கட்சியே காணாமல் போய்விடும்’ என்று சி.வி.சண்முகம் ஆத்திரத்துடன் வெடிக்க, கூட்டம் ரணகளமானது.

அதிமுக – திமுக கூட்டணியின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதும், வி.சி.க தலைவர் திருமாவளவனை முதல்வராக்கும் திட்டத்தை முன்வைத்தார் உதயநிதி ஸ்டாலின். அதற்காகவும் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியது பாஷ்யம் அபினேஷ் தான். அதற்கும், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இப்படி எடப்பாடி பழனிசாமியை குழப்பி, கட்சியையே புதைக்கும் அளவுக்கு சிக்கவைத்துவிட்டார் பாஷ்யம் அபினேஷ். ‘திமுக-அதிமுக கூட்டணி’ என்ற திட்டத்தை அவர் முன்வைக்கவில்லை என்றால், இவ்வளவு பெரிய குழப்பம் அதிமுகவுக்குள் இப்போது ஏற்பட்டிருக்காது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுபவர்கள்கூட, அமைதியான முறையில் மாற்று ஏற்பாடுகளுக்கு திட்டமிட்டிருப்பார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் கட்சியை சீரமைப்பது குறித்து விவாதித்திருப்பார்கள். இப்போது எல்லாமே கையை மீறிப் போய்விட்டது” என்கிறார்கள்
அதிமுக-வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட பாஷ்யம் அபினேஷ், தற்போது தவெக-வின் அதிகார மையங்களோடு நெருங்க ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர தேசத்தின் ஆட்கள் மூலமாக, ‘தவெக ஆட்சி சுமூகமாக நடைபெறுவதற்கு டெல்லி பாஜகவிடம் நான் பேசித் தருகிறேன்’ என்று வலிய வந்து நேசக்கரம் நீட்டியிருக்கிறாராம். உடனடியாக பாஷ்யம் அபினேஷ் ஜாகை மாறியிருப்பதை, கண்டு முகம் சுழிக்கின்றன திமுக, அ.தி.மு.க வட்டாரங்கள். முதல்வர் விஜய்க்கு பாசக்கரம் நீட்டியிருக்கும் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினரும் பாஷ்யம் அபினேஷ் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதால், அதிகார மையத்தில் பல அதிரடி நகர்வுகள் நடக்கலாம் என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வாட்ஸ்-அப் சேனலில் இணைந்திருங்கள்.. லிங்க் கிளிக் https://whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s
