Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவன் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் சிறார்கள் என்பதால், அவர்களை நெற்குன்றத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றொரு நபரை புழல் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.

சென்னை திருவொற்றியூர் வசந்தம் நகரைச் சேர்ந்த 16 வயதான தனுஷ், அப்பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளியில் ‘யார் சீனியர்?’ என்ற விவகாரம் தொடர்பாக, தனுஷின் நண்பருக்கும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் தனுஷ்குமார் என்ற மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Republic Tamil

இந்த விவகாரத்தில் தனுஷ் தனது நண்பருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதனால் அவருக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும், அஜாக்ஸ் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு தனுஷை சில மாணவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பிளஸ் 1 மாணவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் அடங்கிய கும்பல் தனுஷை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  38-க்கு சளித்துப்போன 49..! "அம்மா ஊருக்குப் போயிருக்கா..!" கள்ளக் காதலில் கொடூர ட்விஸ்ட்..!

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 12 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் திருவொற்றியூர் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே உள்ள போலீஸ் பாய்ஸ் கிளப் அலுவலகத்தில் வைத்து, நேற்று இரவு முதல் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இறுதிக்கட்ட விசாரணை பண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றதாகவும், விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறார்களை நெற்குன்றத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நபரை புழல் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  அன்று நக்சலைட்டுகளை நடுங்க வைத்த இரும்பு மனிதர்! 46 ஆண்டுகளுக்குப் பின் வீடியோ காலில் உருகிய முன்னாள் டிஜிபி தேவாரம்!

இதனிடையே, கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. சில பெற்றோர்கள், தங்களது மகன்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லை என்றும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் தங்கள் பிள்ளைகளை கைது செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

அதே நேரத்தில், உயிரிழந்த தனுஷின் உறவினர்கள், இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், தொடர்புடைய அனைவரையும் முழுமையாக விசாரித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனுஷ் பள்ளியில் கஞ்சா பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில், குணா என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குணா மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஏற்கனவே மூன்று வழக்குகள் இருப்பதாகவும், அவர் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  ஆசை யாரை விட்டது… தனுஷ் வாரிசின் ஆட்டம் ஆரம்பம்..! யாத்ரா-வுக்காக மாஸ்டர் பிளான்..!

தனுஷ் கொலை சம்பவத்தின் பின்னணி, இதில் தொடர்புடைய அனைவரின் பங்கு மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலை பெற்றோர் இரண்டாவது நாளாகவும் பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது மகனின் உயிரைப் பறித்த அனைவரையும் முழுமையாக கைது செய்ய வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், திருவொற்றியூர் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 hours ago at 5 hours ago