Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலிருந்து, ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா (Ceuta) எல்லைப் பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முயற்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் கடலில் மூழ்கிய விபத்துகளில் முதலில் 41 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மொராக்கோவின் எல்லை நகரமான ஃப்னிடெக் (Fnideq) பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஸ்பெயின் எல்லையை நோக்கி திரண்டனர். அவர்களில் பலர் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தை கடல் வழியாக நீந்தி சியூட்டாவை அடைய முயன்றனர். மேலும் பலர் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த உயரமான கம்பி வேலிகளை உடைத்தும், தாண்டியும் ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சியூட்டாவின் தாராஜல் (Tarajal) கடற்கரை எல்லைச் சாவடியை கடக்க முயன்றபோது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் பலர் சிக்கினர். அதேவேளை, கடலலைகளில் சிக்கி ஏராளமானோர் நீரில் மூழ்கினர். இதன் விளைவாக பல உயிர்கள் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  ஈரானின் வெட்கக்கேடான செயல்..! டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை..! அமெரிக்காவின் மரண அடி..

ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஃப்னிடெக் பகுதியிலிருந்து கடல் வழியாக சியூட்டாவை அடைய முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தாராஜல் எல்லைப் பகுதியில் உள்ள கம்பி வேலிகளைத் தாண்ட முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

Republic Tamil

இந்த திடீர் அகதிகள் நெருக்கடியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்பெயின் அரசு தனது ராணுவத்தையும், கூடுதல் காவல்துறையினரையும் சியூட்டா எல்லைப் பகுதியில் குவித்துள்ளது. எல்லையைப் பாதுகாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடல் மற்றும் நில எல்லைகளில் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, சியூட்டா எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் சுமார் 50 ஆயிரம் பேரில், 48 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே மொராக்கோவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

சியூட்டா பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “இது ஸ்பெயின் நாட்டின் பிராந்திய இறையாண்மையை நேரடியாக மீறும் செயல். சட்டவிரோதமாக எல்லைக்குள் நுழையும் முயற்சிகளை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும்; சட்டவிரோதமாக நுழைந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "கூகுளின் ஏகபோக ஆட்டத்திற்கு விழுந்த பலத்த அடி! ஐரோப்பா விதித்த ₹8,000 கோடி அபராதம் – அதிரும் டெக் உலகம்!"

மேலும், கடல் வழியாக எல்லைக்குள் நுழையும் அகதிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பக் கூடாது என்ற ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை மனிதக் கடத்தல் கும்பல்கள் தவறாகப் பயன்படுத்தியதே இந்த மாபெரும் எல்லை ஊடுருவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், மொராக்கோ பாதுகாப்புப் படையினரும் எல்லையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எல்லையை நோக்கி முன்னேறிய கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டதுடன், தடியடியும் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்பட்ட மோதலின் போது எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தும், ஏழு காற்களும் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Republic Tamil

இந்த அகதிகள் நெருக்கடி ஐரோப்பா முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயினுடனான ஷெங்கன் (Schengen) ஒப்பந்தத்தின் கீழ் நடைமுறையில் இருந்த சுதந்திரமான பயண வசதிக்கு தற்காலிக கட்டுப்பாடுகளை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஸ்பெயினிலிருந்து இத்தாலிக்கு விமானம் அல்லது கப்பல் மூலம் பயணிப்போர் இனி வழக்கத்தை விட கடுமையான எல்லைப் பரிசோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் தங்களது எல்லைக் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இதையும் படியுங்க  நேட்டோவின் மரண சாசனம்: முடிவுக்கு வரும் ஈரான் போர்..! பலிக்கும் 40 ஆண்டு கால டிரம்பின் ரியல் எஸ்டேட் ராஜதந்திரம்..?

இந்த விவகாரம் சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி, “ஐரோப்பா பின்பற்றிவரும் இடதுசாரி உலகளாவிய குடியேற்றக் கொள்கைகளின் விளைவையே தற்போது சந்தித்து வருகிறது” என்று கருத்து தெரிவித்ததுடன், இதுகுறித்து முன்னதாக டொனால்ட் டிரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், சியூட்டா நகரின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, ஒரே நாளில் நகருக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் அகதிகளின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் அளவுக்கு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நகரின் பூங்காக்கள், நடைபாதைகள், திறந்தவெளிப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன.

இந்த சம்பவம், ஐரோப்பிய நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு, அகதிகள் மேலாண்மை மற்றும் மனிதாபிமானக் கொள்கைகள் குறித்து மீண்டும் தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago