காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது உள்ளிட்ட அணை மற்றும் பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களிலும், விவசாயிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் தனது கேள்வியில், கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளதா? அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்று விளக்கம் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், காவிரி நதியின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு, கேரளா அல்லது புதுச்சேரி போன்ற கீழ்நிலை ஆற்று மாநிலங்களின் முன் அனுமதியையோ, ஒப்புதலையோ கர்நாடக அரசு பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், இதுபோன்ற திட்டங்களுக்கு கீழ்நிலை ஆற்று மாநிலங்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று எந்தவிதமான நிபந்தனையும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், கர்நாடக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்த மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த விளக்கம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும், தமிழகத்தின் நீர்வள உரிமையை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சட்ட வல்லுநர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுத்தால், அதை உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மூலம் சட்ட ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தவெக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மத்திய அரசின் விளக்கத்தை வரவேற்றுள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், “தங்கள் சொந்த மாநில எல்லைக்குள் அணை கட்டுவதற்கு பிற மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதைத்தான் தற்போது மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது” என்று கூறி, ஜல் சக்தி அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் கர்நாடக மாநில எம்.பி.க்களுடன் அம்மாநில அரசு அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், கர்நாடகாவில் ஏற்கனவே நான்கு பெரிய அணைகள் மூலம் 115 டிஎம்சி அளவுக்கு நீர் சேமிக்கப்படும் நிலையில், மேகதாதுவில் மேலும் 67 டிஎம்சி முதல் 70 டிஎம்சி வரை நீர் சேமிக்கும் அணை கட்டப்பட்டால், காவிரியை நம்பியுள்ள தமிழகத்தின் 28 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும், டெல்டா விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் செல்வதை விட, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு, ராமநகரா மாவட்டம் அருகே காவிரி நதியின் குறுக்கே சுமார் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேகதாது சமநிலை நீர்த்தேக்கத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதும், சுமார் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் காவிரியின் கீழ்நிலைப் பகுதியாக உள்ள தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து கணிசமாக பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசு தொடர்ந்து இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
மத்திய அரசின் இந்த எழுத்துப்பூர்வ விளக்கத்தைத் தொடர்ந்து, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் சட்ட ரீதியான போராட்டமும், அரசியல் மோதலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
