மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவின் ஆதரவு கோரிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக நிராகரித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை” என்ற ஒற்றை வரியுடன் திமுகவின் இறுதிப் பதில் பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கனிமொழி மூலம் பேச்சுவார்த்தை?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் ஆதரவைப் பெற பாஜக தலைமை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி மூலமாக பாஜக முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையின் போது, “எதுவாக இருந்தாலும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் முடிவுதான் இறுதியானது” என எதற்கும் பிடிகொடுக்காமல் கனிமொழி பேசிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலினின் கறார் பதில்
விஷயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்ற உடனே, அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். முக்கியப் புள்ளிகள் மூலமாக பாஜக தலைமைக்குத் தனது செய்தியைத் தெளிவுபடுத்திய ஸ்டாலின், தொகுதி மறுவரையறை விவகாரத்திலோ அல்லது அரசியல் ரீதியாகவோ பாஜகவுடன் கூட்டணியோ, ஆதரவோ “இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை” என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.

பாஜகவின் ரியாக்ஷன் என்ன?
திமுகவிடமிருந்து வந்த இந்த கறாரான பதிலால் பாஜக தலைமைக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், “காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் திமுக நீடிக்காது” என்ற ரீதியில் பரவிய தகவல்கள் தாமரை கட்சிக்குச் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, இந்தியா கூட்டணியில் திமுக நீடிக்காது என்ற தகவல் பாஜகவுக்குக் கடத்தப்பட்டதாக பேசப்படுகிறது.
அறிவாலயத்தின் சாட்டையடி
பாஜகவின் இந்த ஆதரவு கோரிக்கையை முழுமையாக நிராகரித்ததில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசியலில் தற்போதைய சூழலில், பாஜகவின் தயவு திமுகவுக்கு இருக்கிறது என்ற பிம்பம் உருவானாலே, தவெக அரசியல் அழுத்தம் பெருமளவு குறைந்துவிடும் என்பது இந்த இரண்டாம் கட்ட தலைவர்களின் கணிப்பாக இருந்திருக்கிறது.
இதே கருத்தை அவர்கள் திமுக தலைமையிடமும் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், உடனே சுதாரித்துக் கொண்ட அறிவாலயத் தலைமை, “பாஜகவுக்கு என்ன பதில் சொல்லப்பட்டதோ, அதே பதில்தான் கட்சிக்காரர்களுக்கும். கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தங்களது சொந்தக் கட்சியினருக்கும் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கபடியாடும் காங்கிரஸ்
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் ”பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டனியில் திமுக இணையாது. இரு கட்சிகளின் கொள்கைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், அவை ஒன்றாகச் செயல்படும் சூழல் உருவாக வாய்ப்பில்லை. கடந்த 8-ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது உண்மை.
அதேபோல், தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். அந்த அரசில் எங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாக உள்ளதும் உண்மைதான். அதே நேரத்தில், திமுக எம்.பி.க்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். திமுக தலைமையுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. திமுக இன்னும் எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அது மத்தியில் ஆளும் கட்சியாகவோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினராகவோ மாறவில்லை. திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகளை நான் படித்தேன்.

அதிலிருந்து பாஜக – திமுக இடையே எந்தவித உடன்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது. தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, அதற்கு எதிராக திமுக நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
