தமிழக அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர், மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல், தனிப்பட்ட பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கோரி மத்திய வெளியுறவு அமைச்சகம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக தொழில் மற்றும் முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர், சமீபத்தில் தங்களது துறைகள் சார்ந்த அரசுமுறைப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.
இந்தப் பயணத்தில், துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் உடன் சென்றதாக கூறப்படுகிறது.
முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட அரசுமுறை நோக்கங்களுக்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அந்தப் பயணம் விதிமுறை மீறல் தொடர்பான சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக, ஒரு மாநிலத்தின் அமைச்சர்கள் அல்லது உயரதிகாரிகள் அரசுமுறைப் பணிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து முன்கூட்டியே உரிய அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

மேலும், அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணங்களின் போது, தனிப்பட்ட பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக, டிப்ளமேட்டிக் (Diplomatic) அல்லது அதிகாரப்பூர்வ (Official) பாஸ்போர்ட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.
இந்த சிறப்பு பாஸ்போர்ட்டுகள் மூலம் வெளிநாடுகளில் அரசுப் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு, தூதரகச் சலுகைகள் மற்றும் குடியுரிமைச் சோதனைகளில் வழங்கப்படும் சிறப்பு வசதிகள் முறையாக கிடைக்கும்.
ஆனால், இந்த விவகாரத்தில் இரு அமைச்சர்களும் மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறாமல், தங்களது தனிப்பட்ட பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “மத்திய அரசின் அனுமதியின்றி அமைச்சர்கள் எவ்வாறு அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றவில்லை என்றும், அரசை விதிமுறைகளுக்கு ஏற்ப வழிநடத்தத் தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர்களுடன் வெளிநாடு சென்ற துறைச் செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் தனி உதவியாளர்களிடமும் மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களின் போது அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாக இருப்பதால், அவர்கள் மீதும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விதிமுறைகளின்படி, அமைச்சர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வ பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, டிப்ளமேட்டிக் அல்லது அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். தனிப்பட்ட பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துவது அந்த நடைமுறைகளுக்கு முரணானதாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நோட்டீஸ் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா, மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டதா, தனிப்பட்ட பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டதா என்பன குறித்து தற்போது விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
