தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்றுள்ள நடிகை ஸ்வாசிகா, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த ஆரம்பகாலத்தில் தாம் எதிர்கொண்ட மோசடி சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் இயக்குநர் லிங்குசாமியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, இடைத்தரகர் ஒருவர் தம்மிடம் ரூ.1 லட்சம் கேட்டதாகவும், அந்த சம்பவம் தமது வாழ்க்கையில் மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க:- “70 வருஷ நட்பு.. அவன் பென்ஸ் கார்ல போனான், நான் நடுரோட்டுல நின்னேன்!”பாக்யராஜ் பற்றி ஆர்.சுந்தர்ராஜன் உடைந்து பேசிய ரகசியங்கள்!
‘கோரிப்பாளையம்’, ‘மைதானம்’, ‘வைகை’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்வாசிகா, பின்னர் மலையாள திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் அவருக்கு புதிய ரசிகர் பட்டாளம் உருவாகியதுடன், அவரது நடிப்பும் பரவலாகப் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த ‘மாரி’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படியுங்க:- சவரன் தங்கமே ₹90 தானா?! 10 ரூபாயில் ‘ராஜ வாழ்க்கை’ வாழ்ந்த 1960-ன் மிரட்டல் உண்மைகள்!
இந்நிலையில், சினிமா பயணத்தின் தொடக்கத்தில் சந்தித்த சவால்கள் குறித்து ஸ்வாசிகா மனம் திறந்து பேசியுள்ளார்.
“நான் பத்தாம் வகுப்பு படிப்பை முடித்தவுடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தேன். எனது அப்பாவுக்கு நான் நடிகையாக வேண்டும் என்ற விருப்பம் இல்லை.
இருந்தாலும் என் கனவை நம்பி முயற்சி செய்யத் தொடங்கினேன். ஆரம்ப நாட்களில் தினமும் இரவு வீட்டை நினைத்து அழுவேன். ஆனால், ஒருநாள் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் விடவில்லை.
இதையும் படியுங்க:- “சொல்லிப் பார்த்தாங்க கேட்கல.. அப்புறம் நடந்ததே வேற லெவல்! கடலூர் அரசுப் பள்ளியில் அதிரடி!”
அந்த காலத்தில் பல மேனேஜர்கள் என்னை ஏமாற்றியுள்ளனர். சிலரை சந்திக்கச் செல்லும்போது மிகவும் பயமாக இருக்கும். அப்போது ஒருவர் தன்னை மேனேஜர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘ரூ.1 லட்சம் கொடுத்தால் இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் லிங்குசாமியை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்று கூறினார்.
அந்த வாய்ப்பை உண்மையென நம்பிய நாங்கள், என் அம்மாவின் நகைகளை அடகு வைத்து பணத்தைத் தயாரிக்கவும் முனைந்தோம். பின்னர் அவர் கூறியிருந்த ஹோட்டலுக்குச் சென்றபோது, அங்கு அந்த நபரும் இல்லை; அவர் கூறியிருந்த இயக்குநர்களும் இல்லை. பணத்துடன் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். அந்த சம்பவம் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு என் அம்மாவுக்கும் பயம் வந்துவிட்டது.”
இதனைத் தொடர்ந்து, தமிழில் நடித்த ‘வைகை’, ‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட படங்கள் வெளியானாலும், எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஸ்வாசிகா கூறினார்.
இதையும் படியுங்க:- சி.விஜயபாஸ்கருக்கு பேரிடியை இறக்கிய செய்தி..! உயர் நீதிமன்றம் அதிரடி..!
“தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் கேரளாவுக்குச் சென்று மலையாள சினிமாவில் முயற்சி செய்தேன். அதோடு சும்மா இருக்கக் கூடாது என்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சீரியல்களில் நடிப்பது போன்ற வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டேன். அந்த அனுபவங்கள்தான் என்னை மேலும் வலுவாக்கின.”
மேலும், ‘லப்பர் பந்து’ திரைப்படம் வெளியான பிறகுதான் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“அந்த படம் வெளியான பிறகுதான் எனக்கு உண்மையான பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தது. பலரும் என் நடிப்பைப் பார்த்து கண்கலங்கினார்கள். நான் இதுவரை காத்திருந்த அங்கீகாரம் அப்போது கிடைத்தது.”
அதே நேரத்தில், சினிமாவில் புதிதாக வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையையும் ஸ்வாசிகா விடுத்துள்ளார்.
இதையும் படியுங்க:- “மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை!” 5 மணிநேர விசாரணைக்குப் பின் எ.வ. வேலு அதிரடி! தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த செக்!
“இன்றைக்கும் சினிமா துறையில் சிலர் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சுமார் 10 சதவீதம் பேர் இதுபோன்ற மோசடிகளுக்காகவே செயல்படுகிறார்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. எந்த வாய்ப்பாக இருந்தாலும் முறையாக உறுதி செய்த பிறகே முடிவு எடுக்க வேண்டும்.”
இந்த பேட்டியில் அவர் மேலும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார். ஒருகாலத்தில் ஏ.ஆர். முருகதாஸை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஏமாற்றப்பட்ட தமக்கு, பின்னாளில் சொந்த முயற்சியாலும் திறமையாலும் வளர்ந்த பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது அவர் தனது நடிப்பைப் பாராட்டியதாகவும் தெரிவித்தார். அந்த தருணம் தமது நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்ததாக ஸ்வாசிகா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பல ஆண்டுகள் போராடி, ஏமாற்றங்களையும் தோல்விகளையும் கடந்து இன்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஸ்வாசிகாவின் இந்த அனுபவம், சினிமா கனவுடன் வரும் இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியாகவும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் உத்வேகமான வாழ்க்கைப் பாடமாகவும் அமைந்துள்ளது.
