Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் அருகே அமைந்துள்ளது கொண்டரங்கி மலை. சுமார் 3,825 அடி உயரம் கொண்ட இந்த மலை செங்குத்தான அமைப்பைக் கொண்டது. மலையின் உச்சியை அடைய, சுமார் 5,000 படிக்கட்டுகளைக் கொண்ட குறுகலான மற்றும் கடினமான மலைப்பாதையை கடக்க வேண்டும்.

இந்த கடினமான மலையை, தினமும் நான்கு முறை ஏறி இறங்கி உலகச் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கோபாலகிருஷ்ணன்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி. இயற்பியல் (Physics) பட்டதாரியான கோபாலகிருஷ்ணன், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

தினமும் தனது சொந்த ஊரான மட்டப்பாறையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் பயணம் செய்து கொண்டரங்கி மலை அடிவாரத்தை அடைகிறார். அங்கிருந்து காலை 7 மணிக்கு மலையேற்றத்தைத் தொடங்கி, சுமார் 20 நிமிடங்களில் மலையின் உச்சிப் பகுதியை அடைகிறார். பின்னர் வெறும் 10 நிமிடங்களில் மீண்டும் அடிவாரத்திற்குத் திரும்புகிறார்.

இதையும் படியுங்க  ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க..! வெளிநாடு போகாதீங்க! – மக்களுக்கு மோடி போட்ட 'திடீர்' கண்டிஷன்!

இவ்வாறு ஒரு முறை ஏறி இறங்குவதற்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகின்றன. தினமும் நான்கு முறை இந்த மலையை ஏறி இறங்குவதற்கு மொத்தமாக 2 மணி முதல் 2 மணி 30 நிமிடங்கள் வரை செலவிடுகிறார்.

2023 அக்டோபர் 19-ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த முயற்சியை, மழை, வெயில், பனி என எந்த காலநிலையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செய்து வருகிறார். 1,000 நாட்கள் தொடர்ந்து மலையை ஏறி உலகச் சாதனை படைக்க வேண்டும் என்பதே அவரது இலக்காகும்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சாதனைக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். தினமும் நான்கு முறை கொண்டரங்கி மலையை ஏறி இறங்குகிறேன்.

மேலே செல்ல 20 நிமிடங்களும், கீழே இறங்க 10 நிமிடங்களும் ஆகின்றன. இதுவரை 867 நாட்களை நிறைவு செய்து, உலக அளவிலான ஒரு சாதனையைப் பதிவு செய்துள்ளேன். தற்போது 1,000 நாட்களை நிறைவு செய்து கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே என் கனவு.

இதையும் படியுங்க  ஒன்லி வெர்ஜின் ஆம்பள.. 6 அடி உயரம், ரூ.2 லட்சம் சம்பளம், 24 மணி நேர GPS டிராக்கிங்!' திருமணத்திற்கு பெண் போட்ட கண்டிஷன்..!

அதன்பிறகு தமிழ்நாடு மற்றும் இந்தியா சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வெல்ல வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் என் முழு உழைப்பையும் செலுத்தி தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன்” என்றார்.

மேலும், “என் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. எந்தவித பின்னணியோ, பொருளாதார ஆதரவோ எனக்கு இல்லை. பகல் நேரத்தில் கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில்தான் இந்த முயற்சிக்கான செலவுகளைச் செய்து வருகிறேன். மூன்று ஆண்டுகளாக தனியாகப் போராடி வருகிறேன். இனி எனது முயற்சிக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இளைஞர்கள் செல்போன்களில் மட்டுமே நேரத்தை செலவிடாமல், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தனது சாதனை முயற்சிக்கு தமிழக அரசு மற்றும் தமிழக விளையாட்டுத் துறை உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், தமிழகம் மற்றும் இந்தியா சார்பில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சருக்கும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  ‘தர்பூசணி’ சாப்பிட்ட ஒரே குடும்பத்தின் 4 பேர் மரணம்..! அம்பலமான பகீர் பின்னணி..!

கோபாலகிருஷ்ணனின் இந்த விடாமுயற்சியைப் பார்த்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கொண்டரங்கி மலைக்கு வந்து அவரைச் சந்தித்து ஊக்கம் பெற்று வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து மலையை தரிசிக்க வந்த பெண்கள் சிலரும், அவரை நேரில் பாராட்டுவதற்காக நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கோபாலகிருஷ்ணனின் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம். போதை உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து இளைஞர்களை விளையாட்டுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் அவரது முயற்சி உள்ளது. எனவே, அவருக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரமும், விளையாட்டுத் துறையில் வாய்ப்பும் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் உலகச் சாதனையை நோக்கி பயணிக்கும் கோபாலகிருஷ்ணனின் இந்த முயற்சி, பல இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago