https://republictn.com/

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர், தனது மகள்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உருவக்கேலி (Body Shaming) மற்றும் அவதூறு கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தன் குட்டிகளைப் பாதுகாக்கும் ஒரு காயம்பட்ட புலி நான்” என்று எச்சரிக்கை விடுத்துள்ள அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் சுந்தர் சி – குஷ்பூ தம்பதியருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். அண்மையில், மூத்த மகள் அவந்திகாவின் உடல் எடையையும், ‘டபுள் ஆக்குபென்சி’ திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வரும் இளைய மகள் அனந்திதாவின் தோற்றத்தையும் குறிவைத்து சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் உருவக்கேலி பதிவுகளை வெளியிட்டனர்.

இதனால் மனவேதனையடைந்த குஷ்பூ, தனது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, அந்த விமர்சனங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆவேசமாகவும் பதிலளித்துள்ளார்.

அந்தப் பதிவில், “இது என் குடும்பம். அன்பு, நம்பிக்கை, புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட குடும்பம் இது. இன்று நாங்கள் இருக்கும் நிலையை அடைய எண்ணற்ற போராட்டங்களையும், ரத்தமும் வியர்வையும் சிந்திய உழைப்பையும் கடந்துள்ளோம். என் மகள்கள் ஒருபோதும் எங்களது பிரபல அந்தஸ்தைத் தவறாக பயன்படுத்தியதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள். தன் குட்டிகளைப் பாதுகாப்பதற்காக பாய்ந்து குதறும் ஒரு காயம்பட்ட புலிதான் தாய். இனி என்னால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. போதும்” என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குஷ்பூவின் இந்த தைரியமான பதிவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும், ஏராளமான நெட்டிசன்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் உருவக்கேலிக்கு எதிராக குரல் கொடுத்த குஷ்பூவின் நிலைப்பாட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 hours ago at 19 hours ago