Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை ஆர்.கே. நகரில் திமுக துணை வட்டச் செயலாளர் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன.

வடசென்னையின் ஆர்.கே. நகர் 38-வது பகுதியில் வசித்து வரும் திமுக துணை வட்டச் செயலாளர் ராஜா, தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று காலை தனது வீட்டின் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் இருந்து வந்த இருவர் திடீரென ராஜாவை கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் இருந்து தப்பிக்க ராஜா ஓட முயன்றபோதும், அவரை துரத்திச் சென்ற மர்மநபர்கள் மீண்டும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். படுகாயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்க  “நோ பேரம்.. நோ சண்டை.. இனி மீட்டர் தான் கிங்!” 13 வருஷத்துக்கு அப்புறம் ஆட்டோ கட்டணத்தில் அதிரடி ட்விஸ்ட்!

மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்கு ஆளான ராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஒரு பெண்ணுடன் ராஜாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுவதால், அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல்கள் குறித்து போலீசார் அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், இருசக்கர வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த ராஜாவை இரண்டு பேர் கத்தியால் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ஆர்.கே. நகர் பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  "இலவச சைக்கிள்.. இரும்புக்கடையில் விற்ற மாணவர்கள்! தரம் குறைவா? தடம் மாறிய சிந்தனையா? நீலகிரியில் பரப்பரப்பு!"

இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து ஆர்.கே. நகர் போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago