பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நிற்பது அதிகரித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் பெண்கள் இந்தப் பாதிப்புக்கு அதிகளவில் உள்ளாகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிஎம்ஜே குளோபல் ஹெல்த் (BMJ Global Health) மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 30 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில், 14 பேரில் ஒருவருக்கு 45 வயதுக்கு முன்பே மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் (Premature Menopause) ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பாதிப்பு நகர்ப்புற பெண்களைவிட கிராமப்புற பெண்களிடையே அதிகமாகக் காணப்படுவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக இந்தியாவில் உள்ள 3 லட்சத்து 65 ஆயிரம் பெண்கள் உட்பட, 44 நாடுகளைச் சேர்ந்த 7 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஆய்வின் முடிவுகளின்படி, ஐரோப்பிய பெண்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசிய பெண்களுக்கு முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் வாய்ப்பு 34 சதவீதம் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இளம் வயதிலேயே மாதவிடாய் நிற்பதால், பெண்களுக்கு இதய நோய், எலும்பு பலவீனம், மனச்சோர்வு மற்றும் ஆரம்பகால மரணம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்கூட்டிய திருமணம், போதிய ஊட்டச்சத்து இல்லாமை, சுகாதார வசதிகளின் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான காரணிகள் ஆகியவை இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனவே, வளரும் நாடுகளில் சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, பெண்களுக்கான ஆரோக்கியத் திட்டங்களில் மாதவிடாய் மேலாண்மை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வையும் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
