Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை திரைப்பட பாணியில் காரில் கடத்திய பெற்றோர்; காரை விரட்டிப் பிடித்து பெண்ணை மீட்ட காவல்துறையினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரைப்பட பாணியில் காரில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் கடத்தல் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 3 பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சித்தானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரும், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவள்ளியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு தனியாக வசித்து வந்த தம்பதியினர், நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக மணப்பாறைக்கு வந்தனர். பின்னர் ஆட்டோவில் சித்தானந்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் நிலையம் பகுதியில், சித்திரைவள்ளியின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு கார்களுடன் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அவ்வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்த அவர்கள், சித்திரைவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக கடுமையாக எதிர்த்து போராடினார். காரின் கண்ணாடிகளை உடைத்து மனைவியை மீட்க முயன்றபோதும், அவரை தாக்கிவிட்டு சித்திரைவள்ளியை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அஜித்குமார் உடனடியாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கடத்தல் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, சித்திரைவள்ளியை பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பெண்ணை கடத்தியவர்களில் அவரது அக்கா வீட்டுக்காரர் முருகேசன் மற்றும் உறவினர்களான மலைச்சாமி, பிரகாஷ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காதல் திருமணத்தை ஏற்க மறுத்ததால்தான் இந்த கடத்தல் முயற்சி நடைபெற்றதா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் திரைப்பட பாணியில் நடைபெற்ற இந்த துணிகர கடத்தல் முயற்சி, மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago