தமிழக அரசியலில் அதிரடியாக தடம் பதித்து, சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிகளைக் குவித்துள்ள தவெக, தற்போது திருச்சி மாவட்டத்தில் கடுமையான உட்கட்சிப் பூசலையும், கோஷ்டி மோதல்களையும் சந்தித்து வருகிறது. ஆரம்பகாலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்த தவெக நிர்வாகிகளும், விஜய் ரசிகர்களும் ஓரங்கட்டப்பட்டு, மாற்றுக்கட்சிகளில் இருந்து, குறிப்பாக அதிமுகவில் இருந்து அண்மையில் இணைந்த ‘சீனியர்’ அரசியல் தலைவர்களின் ஆதிக்கம் திருச்சியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ‘வாரிசு அரசியல், உள்ளாட்சித் தேர்தல் சீட் வேட்டை, கோஷ்டிப் பேனர்கள்’ என தவெக-வின் திருச்சி கோட்டைக்குள் தற்பொழுது அரங்கேறி வரும் குடுமிபிடி சண்டைகளால், நிர்வாகிகள் மாற்றுக் கட்சிக்குத் தாவத் தயாராகி வருவதாக அங்கு கள நிலவரம் அதிர்ச்சியூட்டுகிறது.

வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால்
திருவெறும்பூர் தொகுதியில் மாவட்ட செயலாளராக அருள் விஜய் பதவியில் இருந்து வந்தார். தனக்கு திருவெறும்பூர் போட்டியிட சீட்டு கிடைக்கும் என தனது ஆதரவு ஆட்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கும் 10 நாளைக்கு முன்பாக திமுகவில் இருந்து ராஜினாமா செய்து விட்டு விஜய் கட்சிக்குச் சென்ற நவல்பட்டு விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கவே, அவர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இதன் காரணமாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு கோஷ்டியாக செயல்பட்டு வரும்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் திருவறும்பூர் தொகுதியை சேர்ந்த சபரி என்ற நிர்வாகியை தொலைபேசி மூலம் அழைத்து நாவல்பட்டு விஜி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தது சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. நவல்பட்டு விஜய் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என கட்சியினர் பேசி வந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் தலைமை நவல்பட்டு விஜியை அழைத்து மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்துள்ளனர்.

தவெக டெல்டா மண்டல பொறுப்பாளர்கு.பா.கிருஷ்ணன்.
திருவெறும்பூரில் தொகுதியில் ஏற்கனவே இருந்த கோஷ்டி பூசல் தற்போது அதிகரித்து அருள்விஜி ஒரு தனி கோஷ்டியாகவும்,, நவல்பட்டு விஜி ஒரு தனி கோஷ்டி என உட்கட்சி பூசல் குடுமிபிடி சண்டையில் சென்று கொண்டிருக்கிறது. திருவரம்பூர் தொகுதியில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடும் நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியும் அதற்கு ஈடாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கிழக்குத் தொகுதி பொறுப்பாளராக சவுகத், இருந்து வரும் நிலையில் கரிகாலன் என்பவரும் தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தன் மகன் சிரஞ்சீவியுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து புதிய கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி
திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு விஜய் வந்த பொழுது வெல்லமண்டி நடராஜனையும், அவரது மகனையும் பஸ்ஸில் மேல் ஏற்றி வைத்தது இன்னும் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்ததால் அவர்கள் தாங்கள்தான் திருச்சி கிழக்கு தொகுதி என முடிவு செய்து நடைபெற்ற விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியை தடபுடலாக நடத்தினர்.
மேலும் அதிமுகவை சேர்ந்த பலர், வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் தவெகவில் இணைவதால் கு.பா.கிருஷ்ணன் வேறு; நான் வேறு என்ற நிலையில் தனித்தனி கோஷ்டியாக வெல்லமண்டி நடராஜன் செயல்பட்டு வருகிறார்.

விஜய் எதிர்த்து கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் பராஜசேகர்
இதேபோல் டெல்டா மண்டல பொறுப்பாளராக உள்ள கு.பா.கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி அதிமுகவினர் பத்மநாபன், பூபதி என்று பல்வேறு பதவிகள் இருந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால் கு.பா.கிருஷ்ணனுக்கு ஆதரவு கோஷ்டி பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தனக்கென்று ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டு மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக துணை சபாநாயகருமான ரவிசங்கரும் தனி கோஷ்டியாக அவர் செயல்பட்டு கொண்டு வருகிறார். துணை சபாநாயகர் ரவிசங்கருக்கும், கு.ப.கிருஷ்ணனுக்கும் ஏழாம் பொருத்தமாக செல்லும் நிலையில் கு.பா.கிருஷ்ணன் தன்னுடைய தலைமையில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் திருச்சியில் ஒரு துணை சபாநாயகர் இருக்கிறார் என்பது கூட நினைவில் கொள்ளாமல் எந்த பிளக்ஸ், பேனர்களிலும் அவரது புகைப்படத்தை போடுவது கிடையாது.

முன்னாள் துணை மேயர் சீனிவாசன்
தனது மகன் சிரஞ்சீவி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், மணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் புகைப்படம், அவரது ஆதரவாளர்கள் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறுகின்றன.
இதனிடையே திருச்சி மாவட்டத்திற்கு பொறுப்பாளராக ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று அறநிலைத்துறை அமைச்சராக உள்ள ரமேஷை கட்சி நியமித்துள்ளது. அமைச்சராக பொறுப்பேற்ற பின் திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர் ஆனந்தன் இதுவரை ஒன்பது சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கட்சியினரை அழைத்து ஆலோசனைக் கூட்டமோ அல்லது தனிப்பட்ட முறையில் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கட்சியினர் அமைச்சர் தங்களை பார்க்கக்கூட வருவதில்லை என்று சொல்லி மிகப்பெரிய புலம்பல் கட்சியினர் மத்தியில் இருந்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கோஷ்டி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் பூசல் அதிகரித்து வருகிறது.இவர்களை ஆனந்தன் கட்டுப்படுத்த முடியுமா? என்பது கேள்வி.
ஏனென்றால் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவை சேர்ந்த அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட முன்னாள் அமைச்சர்கள் கு.பா.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் துணை மேயர் சீனிவாசன், கிழக்குத் தொகுதியில் விஜய்க்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் இருக்கும்போது அமைச்சர் ஆனந்தன் அவர்களைத் தாண்டி கோஷ்டிகளிடம் பேசி தீர்வை காண்பாரா என்பது கேள்விக்குறி.
தமிழக வெற்றி கழகத்தின் தற்பொழுது திருச்சி தவெகவில் அதிமுகவினர் அதிக அளவு இணைந்து வருவதால் இது விஜய் கட்சியினருக்கு தங்களுக்கு எதிர்காலம் இருக்குமா? என தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், தற்பொழுது காலியாக உள்ள கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக கு.பா.கிருஷ்ணன் தனது மகன் சிரஞ்சீவிக்கு ஆதவ் அர்ஜுன் மூலம் காய் நகர்த்தி வருகிறார், இதற்கு எதிராக வெல்லமண்டி நடராஜன் தனது மகன் ஜவஹர்லால் கிழக்கில் போட்டியிடுவதற்காக புஸ்ஸி ஆனந்த் மூலமாக காய் நகர்த்தி வருகிறார்.

இதனிடையே தற்போது கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் வளர்மதியும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசனும் வேறு வழியில் முயற்சி செய்கிறார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே திருச்சி கிழக்கில் நாம் எப்படியும் சீட்டு வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டு கட்சியில் இனி நமது எதிர்காலம் அவ்வளவுதான் என புலம்பி வருகின்றனர்.
தற்போது திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் மாற்றுக் கட்சியினர் விரைவில் நடைபெற உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ளாட்சி மன்றங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வந்த காரணத்தைக் காட்டி மீண்டும் வெற்றி பெற எங்களுக்கு வாய்ப்புள்ளது என தங்களுடைய சீட்டிற்கு அடிக்கோலிட்டு வருகின்றனர்.
விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் ஏற்பட்டு வரும் கோஷ்டி பூசல் காரணமாக திருச்சியில் தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் மாற்றுக் கட்சிக்கு செல்வார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
-ஜான் கண்ணா, திருச்சி சிறப்பு நிருபர்
