Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய திருப்பமாக, ஆளும் தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்துப் புகார் மனுக்களை அளித்துள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த தொடக்கத்தில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகார்கள் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மூன்று கட்சிகளின் ஒற்றுமை
ஆளுநர் அர்லேக்கரிடம் மூன்று கட்சிகளும் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தாலும், அவர்கள் அளித்த புகார் மனுக்களில் மிக முக்கியமான ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி, அவரது நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் எந்தவிதமான அரசுப் பொறுப்பிலும் இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் இருவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக, ரகசியக் காப்புப் பிரமாணம் எடுக்கப்படும் மிக முக்கிய அரசுப் பிரிவான அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக மூன்று கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த தீவிரமான குற்றச்சாட்டு ஏன்?
அரசியலமைப்புச் சட்டப்படி அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் முன்னிலையில் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அரசின் ரகசியங்கள், கொள்கை முடிவுகள் விவாதிக்கப்படும் கூட்டத்தில், அரசுப் பொறுப்பில் இல்லாத வெளிநபர்கள் கலந்துகொள்வது சட்டப்படியும், அரசியலமைப்பு விதிகளின்படியும் மிகப்பெரிய விதிமீறல்.

இதையும் படியுங்க  ஜூலி லைஃப் முடிஞ்சது..? கழற்றி விட்ட திமுக.. கிட்னி திருட்டு வழக்கை கையெடுக்கும் தவெக?

குதிரை பேரக் குற்றச்சாட்டுகள்
அமைச்சரவைக் கூட்ட விவகாரம் தவிர, திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தவெக அரசு மீது “குதிரை பேர” குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன. தவெக அரசு தங்களது எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க அல்லது மிரட்டி இழுக்கக் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக இரு கட்சிகளும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளன. இப்புகார்களைப் பொறுத்தவரை, இது ஒரு பரஸ்பர அரசியல் குற்றச்சாட்டாகவே பார்க்கப்படுகிறது. தவெக தரப்பில் ஏற்கனவே திருநாவுக்கரசு உட்பட 9 பேர் குதிரை பேரப் புகாரில் கைது செய்யப்பட்டு, அது குற்றவியல் வழக்காக போலீசாரால் கையாளப்பட்டு வருகிறது.

மறுபுறம், திமுக தரப்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தங்களை வழக்குகளைக் காட்டி மிரட்டுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், குதிரை பேரப் புகாரை ஆளுநர் ஒரு அரசியல் குற்றச்சாட்டாகவே அணுக வாய்ப்புள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் மீது பாஜக புகார்
பாஜக சார்பில் ஆளுநரிடம் இரண்டு முக்கிய புகார்கள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்று தவெக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு எதிரானது. மதுரையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தய நிகழ்வில் பங்கேற்ற சிறுமிகளிடம் அமைச்சர் விஸ்வநாதன் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இந்த விசாரணை முடியும் வரை அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக கோரியுள்ளது.

இதையும் படியுங்க  போஸ்டர் ஒட்ட நாங்க… நேற்று வந்தவர்களுக்கு அமைச்சர் பதவியா..? வெடித்துக் குமுறும் விஜய் ரசிகர்கள்..!

ஆளுநரின் அடுத்த மூவ் என்ன?
குதிரை பேரப் புகார்களை விட, ரகசியக் காப்பு விதியை மீறி ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற விவகாரத்தையே ஆளுநர் மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கக்கூடும். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை இந்த விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், ஆளுநர் இதனை ஒரு அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பவும் சட்ட ரீதியாக வாய்ப்புகள் உள்ளன. இது தவெக அரசுக்கு மிகப்பெரிய நிர்வாக, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள்(அரசியல் நிபுணர்கள்.

மாறிவரும் ஆளுநரின் அணுகுமுறை
தவெக அரசு தங்களது பெரும்பான்மையான 108 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது ஆளுநர் காட்டிய இணக்கமான போக்கோ, அல்லது ஆளுநர் உரையின் போது காட்டிய பாராட்டுதல்களோ தற்போது இல்லை. கடந்த சில நாட்களாக ஆளுநர் அர்லேக்கர் மாவட்ட வாரியாக (உதாரணமாக மதுரை சௌராஷ்டிரா கல்லூரி நிகழ்வு) நேரடியாக ஆய்வுகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார். “பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக ஆளுநர் மாளிகையை அணுகலாம்” என்ற நிலையை நோக்கி அவர் நகர்வது, முந்தைய திமுக அரசுக்குக் கொடுத்த குடைச்சல்களைப் போலவே தவெக அரசுக்கும் ஆளுநர் மாளிகை மூலம் நெருக்கடிகள் ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகிறது.

இதையும் படியுங்க  CM Vijay's Karur Plan: இது விஜய் சர்க்கார்..! முதல்வரின் கரூர் ப்ளான்..! கதிகலங்கும் செந்தில் பாலாஜி..!

இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்?
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதுவும் ஒரு தந்திரோபாய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால், குதிரை பேர நடவடிக்கைகள் இன்னும் தீவிரமடைந்திருக்கும். ஏதோ ஒரு சட்ட ரீதியான முன்னெடுப்புகள் பின்னணியில் அமைதியாகத் திட்டமிடப்படுவதன் வெளிப்பாடாகவே தமிழ்நாட்டிற்கான இடைத்தேர்தல் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்றும் கைகோர்த்து தவெக அரசுக்கு எதிராகப் பாய்ந்துள்ளன. குறிப்பாக, முதலமைச்சரின் ஆலோசகர்கள் மீதான “ரகசியக் காப்பு விதிமீறல்” புகார், தவெக அரசின் நிர்வாகத் திறமைக்கே சவாலாக மாறியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையையும், ஆளுநரின் அடுத்தடுத்த நகர்வுகளையும் முதலமைச்சர் விஜய் எவ்வாறு எதிர்கொண்டு தவெக அரசை முன்கொண்டு செல்லப் போகிறார் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

One thought on “திமுக – அதிமுக – பாஜகவின் அதிரடி வியூகம்..! தவெக அரசுக்கு நெருக்கடி..? பின்னணியில் நடக்கும் ‘மெகா’ பிளான்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago