Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி. ஜோசப் விஜய்யின் புதிய எம்.எல்.ஏ. அலுவலகம், சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் அதிநவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையின் முக்கிய விஐபி தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் பெரம்பூர் தொகுதியில், மக்களின் குறைகளை விரைவாகக் கேட்டு தீர்வு காணும் நோக்கில் இந்த அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணிகளில் தற்போது 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்ப்பரேட் பாணியில் பிரம்மாண்டமான தோற்றத்துடன், நவீன உபகரணங்கள், தரமான அலுவலக மரச்சாமான்கள் மற்றும் முழுமையான குளிர்சாதன வசதிகளுடன் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை வீட்டிலிருந்தபடியே பதிவு செய்யும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்கள் நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எவ்வித சிரமமும் இன்றி அலுவலகத்தை அணுகும் வகையில், நுழைவாயிலில் சிறப்பு சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க  "என் பொண்ணு வரமாட்டாள், ஆனா..!" ரிதன்யாவின் கடைசி ஆடியோவை வெளியிட்டு கதறிய தந்தை!

இந்த புதிய அலுவலகம் திறக்கப்படவுள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி மதிப்பிலான சிறப்பு வளர்ச்சித் திட்டங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்தத் திட்டங்களின் கீழ், வியாசர்பாடி சர்மா நகரில் 6 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது. மேலும், உள்நோயாளிகள் பிரிவுடன் கூடிய மூன்று மாடி அதிநவீன அரசு மருத்துவமனை, நார்த் அவென்யூ சாலையில் புதிய உணவு வீதி, வியாசர்பாடி ஏரி சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள், மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

அதேபோல், வியாசர்பாடியில் முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான டயாலிசிஸ் மையம் மட்டுமின்றி, குழந்தைகளுக்கான அதிநவீன பல்துறை சிறப்பு மருத்துவமனையும் அமைக்கப்படவுள்ளது.

அலுவலகம் கார்ப்பரேட் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தேவையற்ற ஆடம்பரச் செலவுகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், புதிய கட்டிடம் கட்டாமல், ஏற்கனவே இருந்த எம்.எல்.ஏ. அலுவலகக் கட்டிடத்தையே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் புதுப்பித்து, நவீனமயமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  நீங்க ரீல்ஸ் எடுக்க நாங்க என்ன லூசா..? அரசியல்வாதிகளின் டார்ச்சர்..! போர்க்களமான ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை..!

முதலமைச்சராக மாநில நிர்வாகப் பொறுப்புகளில் பிஸியாக இருந்தாலும், வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் பெரம்பூர் தொகுதி அலுவலகத்திற்கு நேரில் வந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மாதம் ஒருமுறை சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாகப் பெற்று அவற்றை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெரம்பூர் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபைல் செயலியில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கும் அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் தொகுதியை தனது முதன்மைத் தொகுதியாகத் தேர்வு செய்து தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் விஜய், அந்தத் தொகுதியின் முழுமையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago