https://republictn.com/

தமிழக அரசியலின் அதிகார மையங்களை உலுக்கும் வகையிலான அதிரடி நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக தலைமைச் செயலக வட்டாரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து, கோட்டையில் இருந்த மிக முக்கியமான 7 கோப்புகள் தற்போதைய முதல்வர் விஜய்யின் நேரடி பார்வைக்குச் சென்றுள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார்கள் அடங்கிய இந்த கோப்புகள், தற்போது சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அந்த 7 முக்கிய புள்ளிகள்
லஞ்ச ஒழிப்புத் துறையின் தீவிர விசாரணை, அடுத்தகட்ட பாய்ச்சலுக்காக குறிவைக்கப்பட்டுள்ள திமுகவின் 7 முன்னாள் அமைச்சர்களில் செந்தில் பாலாஜி – முன்னாள் மின்சாரம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத் துறை அமைச்சர், கே. என். நேரு – முன்னாள் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், எ.வ. வேலு – முன்னாள் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி – முன்னாள் கல்வித்துறை அமைச்சர், மூர்த்தி – முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், சேகர் பாபு – முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிஎம்டிஏ அமைச்சர், சிவசங்கர் – முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் உள்ளனர்.

முதல் டார்க்கெட் செந்தில் பாலாஜி
இந்த அதிரடி வேட்டையின் முதல் இலக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிவைக்கப்பட்டுள்ளார். அவர் மீதுள்ள பழைய, புதிய வழக்குகளைத் தீவிரப்படுத்தி, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, முதல்வர் விஜய் நேரடியாக கரூருக்குச் சென்று சில குறிப்பிட்ட குடும்பத்தினரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் சமயத்தில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில், இவருடைய உதவியாளராகக் கூறப்படும் இளஞ்சழியன் என்பவரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக ஜூலை 1-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் முன்னாள் அமைச்சர்கள் கடும் கலக்கமடைந்துள்ளனர். “வழக்கு போடாமல் நம்மள விட மாட்டாங்க, ஜெயிலுக்குப் போக நாம் தயாராவதுதான் சரி” என்று சேகர் பாபு, மூர்த்தி போன்ற தலைவர்கள் தங்களுக்குள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. கட்சி நிதி, குடும்ப நிதி எனப் பல்வேறு வழிகளில் தலைமை தங்களை முறைப்படுத்தியதே இன்று இவ்வளவு பெரிய தலைவலியாக மாறியுள்ளது என்று தங்களுக்குள் புலம்பி வருவதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், திமுகவின் முக்கியப் புள்ளிகளின் நிம்மதியைக் குலைத்துள்ளத. லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த கிடுக்குப்பிடிப் பாய்ச்சல், வரும் நாட்களில் தமிழக அரசியலில் இன்னும் பல அதிரடி திருப்பங்களையும் கைது நடவடிக்கைகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago