சென்னை அடுத்த மணலி பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மணலி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 9 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மட்டுமே மீண்டும் வழங்கப்படுவதாகவும், சில பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டாலும் யாரும் பதில் அளிப்பதில்லை என தெரிவிக்கின்றனர். மேலும், நள்ளிரவில் எம்ஜிஆர் நகர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோதும் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று நள்ளிரவில் மணலி காமராஜர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மின்வாரியத்தை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி போலீசார், மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தினமும் இரவு 9 மணிக்கு மின்தடை ஏற்படுகிறது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மின்சாரம் வழங்கப்பட்டாலும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக விசிறி, ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கடந்த ஒரு வாரமாக இதே நிலை தொடர்வதாகவும், இதனால் குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், புகார் அளிக்க மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றாலும் அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மின்வாரியம் உடனடியாக தலையிட்டு இந்த தொடர்ச்சியான மின்தடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.”
