இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் காலமானதைத் தொடர்ந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், நடிகர் சாந்தனு பாக்யராஜை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், கே. பாக்யராஜின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் சாந்தனு பாக்யராஜ் “உங்களுக்கான என் நன்றியை எப்படி வார்த்தைகளில் அடக்கிவிட முடியும்? மெய்யாகவே, என் உயிர் உள்ளவரை நீடிக்கும் நன்றி இது.”
“என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், முதலமைச்சர் என்ற உயர்ந்த பதவியின் அந்தஸ்தை ஒதுக்கிவைத்து, நேராக வந்து என் தாயார் பூர்ணிமா பாக்யராஜ் அவர்களின் முன்னால் மண்டியிட்டு ஆறுதல் கூறிய விதம் என்னை மிகவும் நெகிழச் செய்தது.”
“மரணத்திலும் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் அரசு மரியாதை என்பது மிகப்பெரிய பாக்கியம். அவரது பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு வழங்கிய உங்களின் இந்தச் செயலை என் இறுதி மூச்சு வரை நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.”
மேலும், பழைய நினைவுகளைப் பகிர்ந்த அவர்,
“என் திருமணத்தின் போது நீங்கள்தான் தாலியை எடுத்து வழங்கி, என் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு தொடக்கமாக இருந்தீர்கள். அதற்கான நன்றியைக் கூட நான் இன்னும் முழுமையாகச் சொல்லித் தீர்க்கவில்லை.”என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இதயம் கனிந்த நன்றி, அண்ணா…” என்று முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிமையான, மனிதநேயமிக்க மற்றும் அன்பான செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
