தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் சமீபத்தில் நடைபெற்ற 60-க்கும் மேற்பட்ட திட்ட இயக்குநர்களின் (இணை இயக்குநர் நிலை) பெருமளவிலான இடமாறுதல்கள் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த இடமாறுதல்கள் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இதில் பெரும் பணப் பரிமாற்றமும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் நிர்வாகத் திறனுக்கும் நேர்மைக்கும் சவால் விடும் வகையில் அமைந்துள்ள இப்புகார் கடிதம், துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட சில நபர்களைக் குறிவைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இடமாறுதலில் பணம் கைமாற்றப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டை ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த சங்கம் புகாராக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ளது.
அந்த புகார் கடிதத்தில் உள்ளதை ஊரக வளர்ச்சித்துறையினர் அனைவரும் ஆமோதிக்கின்றனர். நேர்மையான ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் இந்த அரசில் இடமாறுதலுக்கு பணம் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், ஆளும் வர்க்கம் அதை மறுக்கிறது. அப்படியானால் வெளிப்படையான விசாரணையை நடத்திட முன்வர வேண்டும். கடந்த ஆட்சியில் கூட இல்லாத பண பரிமாற்றம் இந்த ஆட்சியில் நடந்துள்ளது என்ற செய்தி ஆளும்கட்சிக்கு நல்லது இல்லை. வெளிப்படையான விசாரணையே இதற்கு தீர்வாக அமையும்.
குற்றச்சாட்டு கூடுதல் இயக்குநரான கவிதாவை நோக்கியே உள்ளதால், அவரை உடனடியாக இடமாறுதல் செய்த பிறகே விசாரணையை தொடங்க வேண்டும் என்கின்றனர்.

இது குறித்து தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில் ”ஊரக வளர்ச்சித் துறை-இணை இயக்குநர் நிலையில் பணி மாறுதல் அரசாணை வரப்பெற்றது- 4 பேரை திருப்திப்படுத்த 50-க்கும் மேற்பட்டோரை வெவ்வேறு பணி இடத்திற்கு மாறுதல் செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியது முறைகேடுகள் நடைபெற்றது நிர்வாக சீர்கேடு நடைபெற்றது.
திட்ட இயக்குநர் இந்துபாலா எந்த கோப்புகளிலும் கையொப்பம் இடாமல், ஏழை மக்களுக்கு நிதி விடுவிக்காமல் இருந்ததால், இந்துபாலா அவர்களின் மோசமான பணித்திறன் காரணமாக அப்போதைய நேர்மையான தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை அவர்களால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் இந்துபாலா. சந்தேகம் இருந்தால் தற்போதைய முதமைச்சரின் செயலாளர் அண்ணாதுரை அவர்களிடம் இந்துபாலா அவர்களின் பணித்திறன் குறித்து கேட்டறியலாம்.
மீண்டும் ஒரு வாய்ப்பாக இந்துபாலா அவர்களுக்கு செங்கல்பட்டு திட்ட இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கேயும் எந்த கோப்பிலும் கையொப்பமிடாமல் செங்கல்பட்டு திட்ட இயக்குநர் பணி பொறுப்பில் இருந்து 5 மாதத்தில் விடுவிக்கப்பட்டார். அப்படிப்பட்ட இந்துபாலாவிற்கு மீண்டும் திட்ட இயக்குநர் , அதுவும் திருவள்ளூர் மாவட்டம் வழங்கப்பட்டுள்ளது.
திட்ட இயக்குநர் அரசாணை வெளிவருவதற்கு முன்பே ஊரக வளர்ச்சித் துறையில் Establishment பிரிவினை தன் கையில் வைத்திருக்கும் கூடுதல் இயக்குநர் கவிதா அவர்கள் பல மாவட்ட திட்ட இயக்குநர்களை தொடர்பு கொண்டு உங்களை DRDA போட்டுள்ளேன், உங்களை மகளிர் திட்டம் போட்டுள்ளேன், உன்னை வீட்டு அருகிலேயே போட்டுள்ளேன் என பேசி தெரிவித்துள்ளாரே, இது நியாயமா?
இதுதான் Establishment பிரிவை தன் கையில் வைத்திருக்கு கூடுதல் இயக்குநர் அவர்களின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையான செயலா?
கூடுதல் இயக்குநர் கவிதா அவர்களின் பிரதிநிதியாக மகளிர் திட்டம் APO முரளி பல மாவட்ட திட்ட இயக்குநர்களை வாட்ஸ் அப்- இல் தொடர்பு கொண்டு பேரம் பேசி பெற்ற தொகை யாருக்கு சென்றது?
நேர்மையாளர்களான ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அமுதவல்ல மற்றும் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் பிரசாத் வடநரே, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு தெரிந்து தான் நடக்கிறதா இந்த முறைகேடுகள்? த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்தில் இவ்வளவு நிர்வாக சீர்கேடு, அலுவலர்கள் அலைக்கழிப்பு, அலுவலர்களுக்கு வெளிப்படைத் தன்மை இல்லாமல் பணி மாறுதல் மன உளைச்சல் உண்டாக்கும் செயலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைப்பாரா?
ஊரக வளர்ச்சித் துறையின் இந்த அரசாணையினை ரத்து செய்து முறைகேடுகளை தடுப்பாரா முதலமைச்சர்? வெளிப்படைத் தன்மையாக ஆன்லைன் மூலமா பணி மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வெளிப்படையான பணி மாறுதல் உத்தரவு வழங்க முதலமைச்சர் நடவடிக்கைகள் மேற்கொள்வாரா?

அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதலமைச்சர்? ஊழலற்ற நேர்மையாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்பதை முதலமைச்சர் செய்து காட்டுவார் என நம்புகிறோம். காத்திருக்கிறோம். பார்வையில் காணும் அரசாணையின் படி ஊரக வளர்ச்சித் துறையில் இணை இயக்குநர் நிலையில் 60-க்கும் மேற்பட்டோருக்கு எவ்வித நியாயம், தர்மமும் இன்றி 4 பேரை திருப்திப்படுத்த 50-க்கும் மேற்பட்டோரை தென் மாவட்டம், வட மாவட்டம் என அங்கேயும், இங்கேயும் தூக்கி எறிந்துள்ளார்கள். அதில் சில விவரங்களை கீழே சமர்ப்பிக்கிறோம்
பாலகணேஷ், இரமேஷ், ஆர்த்தி, சுரேஷ், லோகநாயகி, வானதி, காஞ்சனா, சங்கமித்திரை, சிவராமன், தேவநாதன், உமாமகேஸ்வரி, சரவணன் ஆகியோர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தில் அதிக காலம் DRDA வழங்கப்பட்டுள்ளது ஏன்? ஈஸ்வரன் அவர்களுக்கு DRDA வழங்கவில்லை ஏன்? உமாமகேஸ்வரியின் பணிகாலத்தின் அதிக ஆண்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன்?
சீனுவாசன் அவர்களுக்கு DRDA வழங்கவில்லை ஏன்?
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட, பல 17B குற்றக் குறிப்பாணை பெற்ற செந்தில்குமரனுக்கு DRDA பணி கொடுப்பது நியாயமா? எந்த நிதி கோப்புகளிலும் கையொப்பமிட மறுக்கும் பாலமுருகன் அவர்களுக்கு டெல்டா மாவட்டமான நாகப்பட்டினம் DRDA பணி கொடுத்தது நியாயமா? இது தான் த.வெ.க அரசு டெல்டா மாவட்டத்திற்கு கொடுத்த பரிசா?
உதவி இயக்குநர் நிலையில் இருந்து தற்போது இணை இயக்குநர் வரை மதுரை மாவட்டத்தை சுற்றியே முக்கிய Key post வானதி அவர்களுக்கு மட்டும் எப்படி கொடுக்கப்படுகிறது? கங்காதரணி, தண்டபாணி போன்ற பலருக்கு அவர்கள் பணியாற்றிய மாவட்டத்திலேயே மீண்டும் பணி வழங்குவது ஏன்? பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை செய்த சேலம் மாவட்ட திட்ட இயக்குநர் வாணிநீ அவர்களுக்கு மீண்டும் DRDA பணி வழங்குவதா? இவரின் நிர்வாக சீர்கேடுகளை சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினரை கேட்டாலே தெரியும்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
