சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் ராஜு மீது ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி புகார் வெளியாகியுள்ளது.
17 வயது கபடி வீராங்கனை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கடந்த ஜூன் 26ஆம் தேதி ராஜு மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜுவை கைது செய்ய காவல்துறையினர் இரண்டு தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், மற்றொரு கபடி வீராங்கனையின் தாயார், தனது மகளுக்கும் ராஜு பாலியல் தொல்லை அளித்ததாக புதிய புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேலும், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் ராஜு தனது மகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் தகவல்களை ஊடகங்களிடம் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார்.
தனது மகளிடம் தகாத வார்த்தைகள் பேசியதுடன், தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பி, குடும்பத்தினரிடமிருந்து விலகி இருந்தால்தான் விளையாட்டில் முன்னேற முடியும் என்று கூறி மனநிலையை மாற்ற முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“உங்கள் பெற்றோர்களால் உங்களை முன்னேற்ற முடியாது. என்னால் மட்டுமே உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்” என்று கூறி, தனது மகளின் மனதை மாற்ற முயன்றதாகவும், அதற்கான ஆடியோ பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மகளிடம் கேட்டபோது, பயிற்சியாளர் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து பேசியதால் பயந்து போனதாக மகள் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, மகளுக்கு முழு ஆதரவு அளித்து, யார் எதைச் சொன்னாலும் உடனடியாக தன்னிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதன்பிறகு காவல் ஆணையர் அலுவலகத்திலும் தனியாக மனு அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்ததாக பின்னர் தெரியவந்ததாகவும், அது முன்பே தெரிந்திருந்தால் தனது மகளையோ அல்லது வேறு குழந்தைகளையோ அந்த பயிற்சியாளரிடம் அனுப்பியிருக்க மாட்டேன் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த குற்றச்சாட்டை பலரும் நம்பவில்லை என்றும், பின்னர் ஆடியோ மற்றும் வாட்ஸ்அப் ஆதாரங்களைப் பார்த்த பிறகே மற்ற பெற்றோர்களும் தங்களுக்கு ஆதரவாக முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், முதற்கட்ட புகாரில், பெற்றோர் இல்லாத நிலையில் தனது பாட்டியுடன் வசித்து வந்த 17 வயது கபடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் ராஜு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜுவை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புதிதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
