தமிழக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் ‘கம்பி நீட்ட’த் துடிக்கும் தலைவர்களின் பேச்சால் அறிவாலய வட்டாரத்தில் பலத்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வைகோ, திருமாவளவன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரின் சமீபத்திய கருத்துகள் தி.மு.க. தலைமைக்கு கடும் பீதியை கிளப்பியுள்ளன. தேர்தலுக்கு முன்பாக தொகுதிப் பங்கீட்டின் போது, ‘சட்டாம்பிள்ளை’யாகத் கெடுபிடி காட்டிய தி.மு.க.வின் போக்கை கூட்டணிக் கட்சிகள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்தன. இப்போது ரிசல்ட் வருவதற்கு முன்பே, அந்தப் பகையை ‘கிலி’யாக மாற்றத் தொடங்கிவிட்டன கூட்டணிக் கட்சிகள்.

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் பலவும் தி.மு.க. ஆட்சியைத் தக்க வைக்கும் எனக் கூறினாலும், த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) பிரம்மாண்டமான வாக்கு சதவீதத்தைப் பெறும் என்பதை ஒருமித்த குரலில் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தமிழக அரசியல் சதுரங்க ஆட்டம் திசைமாறத் தொடங்கியுள்ளது. டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், “இனியும் காங்கிரசால் நடுநிலை சக்தியாக இருக்க முடியாது. ஒன்று ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்” என வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார்.

“தி.மு.க.வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சியில் பங்கு வேண்டும்; தனித்து ஆட்சி அமைத்தால் வெளியேறி எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்பதே காங்கிரஸின் மறைமுக எச்சரிக்கை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதேபோல், 4 தொகுதிகளுக்காகப் போராடிப் பெற்ற ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, “மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே த.வெ.க.வுக்குப் பெரிய திருப்பம் ஏற்படலாம்” என ஆருடம் கூறி கவனத்தை ஈர்த்துள்ளார். வி.சி.க தலைவர் திருமாவளவனோ, “நாங்கள் மாற்றம் வேண்டும் என நினைத்திருந்தால் அரசியல் தலைகீழாக மாறியிருக்கும்; தி.மு.க – அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை த.வெ.க. பெருவாரியாக அறுவடை செய்துள்ளது” எனப் போட்டு உடைத்துள்ளார்.

விழுப்புரத்தில் கொந்தளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலர் பாலகிருஷ்ணன், “கூடுதலாக இரண்டு தொகுதிகள் தருவதால் ஒன்றும் ஆகிவிடாது, ஆனாலும் தி.மு.க. தரவில்லை; இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியும் மாற்றமும் பாராட்டத்தக்கது” எனப் பேசி அதிர வைத்துள்ளார். கிரீஷ் ஷோடங்கர் முதல் பாலகிருஷ்ணன் வரை அனைவரது பேச்சும் தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியையே தந்துள்ளது. “தி.மு.க.வுக்குப் பெரும்பான்மை இழுபறியானால் கடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்; த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20-ஐத் தாண்டினால் பலரும் கம்பி நீட்டத் தயாராக உள்ளனர்” என தி.மு.க. நிர்வாகிகளே புலம்பத் தொடங்கியுள்ளனர்.

கிரீஷ் ஷோடங்கர், வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் பேச்சு, தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ‘தி.மு.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை, கூட்டணி கட்சி தலைவர்களின் பேச்சுகள் உணர்த்துகின்றன. த.வெ.க. 20 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றால், அவர்கள் தி.மு.க.வை விட்டு வேறு கட்சிக்கு கம்பி நீட்ட தயாராக உள்ளனர்’ என்றனர். எனவே, ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், கூட்டணி மாற வாய்ப்புள்ளது’ என்றனர்.

நாளை வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியானதும், தமிழக அரசியலில் ‘கூட்டணி மாற்றம்’ எனும் பூகம்பம் வெடிக்க வாய்ப்புள்ளதால், அரசியல் களம் இப்போதே அனலடிக்கத் தொடங்கிவிட்டது..

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *