ஜூன் 18ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து தவெக அரசைத் தாக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதை முன்கூட்டியே கணித்துள்ள முதல்வர் விஜய், தனது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தலைமையிலான குழுவை வைத்து திமுகவின் கடந்த கால ‘ஊழல் ஃபைல்களை’ திரட்டியுள்ளார்.
துறை வாரியாக திமுகவைச் சட்டமன்றத்தில் அலறவிட தவெக அமைச்சர்கள் பின்வரும் புள்ளிவிவரங்களுடன் தயாராகியுள்ளனர். மின்சாரத்துறையில் செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடைபெற்ற ₹397 கோடி ஊழல் விவகாரம், நகராட்சி நிர்வாகத்துறையில் கே.என்.நேரு மீதான பல்லாயிரக் கணக்கான கோடி ஊழல் மற்றும் பணி நியமனத்தில் ₹1,000 கோடி சுருட்டிய விவகாரம், உணவுத்துறை சக்கரபாணி மீதான தார்பாய் கொள்முதல் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் கொடுத்துள்ள புகார்கள், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் முறைகேடுகள் மற்றும் டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட் வசூல் விவகாரங்கள்.
போக்குவரத்துத்துறை: பேருந்து கொள்முதல் ஊழல் மற்றும் ஆர்.டி.ஓ பணியிட மாற்றங்களுக்குக் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியது, இந்து சமய அறநிலையத்துறை, சிஎம்டிஏ- வில் சேகர்பாபு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கியதில் நடந்த பணப் பரிமாற்றங்கள், கனிமவளத்துறையில் துரைமுருகன் மீதான உரிமம் இல்லாத குவாரிகளில் ₹700 கோடி அளவுக்கு நடந்த மணல் கொள்ளை முறைகேடுகள், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையில் மூர்த்தி மீதான தரமற்ற மின்சாதனங்கள் வாங்கியது மற்றும் அதிகாரிகள் பதவி உயர்வில் நடந்த லஞ்ச விவகாரங்களை திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற தத்துவத்தின்படி தவெக-வின் அசுர வளர்ச்சியைத் தடுக்க இரு கழகங்களும், பிற கட்சிகளும் புதிய கூட்டணிகளை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளன. வரும் ஜூன் 18 சட்டமன்றக் கூட்டத்தொடர், திமுகவின் கடந்த கால ஊழல்களுக்கும் தவெக-வின் தற்போதைய நிர்வாகத்திற்கும் இடையேயான ஒரு மகா யுத்தமாக அமையப்போகிறது என்பது மட்டும் உறுதி.
