தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த ‘முதல் மரியாதை’ திரைப்படம் உருவான கதை நமக்கெல்லாம் தெரியும். ஆனால், அந்தப் படத்தின் பாடல்களும் இசையும் இன்றுவரை நம் நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டிருப்பதற்குப் பின்னால், இசைஞானி இளையராஜாவுக்கும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான “சம்பள சவாலும்”, குரு-சீடன் பந்தத்தின் உருக்கமான கதையும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“இந்தப் படம் ஓடாது” என்று கணித்து, சம்பளமே வேண்டாம் என்று மறுத்த இளையராஜா, படம் கோடிகளில் லாபத்தைக் குவித்தபோது என்ன சொன்னார்? பாரதிராஜாவின் அசாத்திய வெறிக்குக் கிடைத்த பரிசு என்ன?
முகநூலில் பகிரப்பட்ட பிரசாந்தின் இந்த சுவாரசியமான பதிவு, அந்தப் பூர்வகால நினைவுகளை நம் கண்முன்னே நிறுத்துகிறது. முதல் மரியாதை கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை. பிரசாந்த் என்பவரின் முக நூல் பதிவில், ‘‘இந்தப் படம் ஓடாது. பாரதி ரிஸ்க் எடுக்கிறான்’ என ஆரம்பத்திலிருந்தே தயக்கத்தோடே இருந்தான் ராஜா. ‘வெற்றி பெற வாய்ப்பில்லாத படத்துக்குச் சம்பளம் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டான். சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை என்பதால் அந்தப் படத்தில் ராஜாவின் இசையை இந்த உலகில் யாராவது ஒரு குறை சொல்ல முடியுமா? அதுதான் ராஜா. பணத்துக்காக இசையை விற்பவன் அல்ல அவன். அந்தப் படத்தின் இசை, ஒரு காவியப் படத்துக்கு, ஓர் இசை மேதை தந்த பரிசு.
படம் மகத்தான வெற்றியடைந்ததும் ‘‘ஏம்பா… எனக்குக் கொடுக்க இருந்த சம்பளத்தைக் கொடுங்கப்பா’’ என இளையராஜா எவ்வளவோ கேட்டுப்பார்த்தான். பாரதிராஜாவோ, ‘‘எப்ப வேணாம்னு சொல்லிட்டியோ, அதோட விட்டுடு… உனக்குச் சம்பளம் தரவே மாட்டேன்’’ என ஒற்றைக்காலில் நின்றுவிட்டான். நினைத்துப்பார்த்தால் எல்லாம் வேடிக்கையான நினைவுகளாக மனதில் நிற்கின்றன.
சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ், ரஞ்சனி, தீபன், வீராசாமி, அருணா என அந்தப் படத்தின் அத்தனை பாத்திரங்களும் காவியக் கதாபாத்திரங்கள். படத்தின் உச்சபட்சக் காட்சி. அன்று படப்படிப்பில் 92 பேர். காலையில் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில், பாரதிராஜாவின் திரையுலக குருவான புட்டண்ணா கனகல் மறைந்துவிட்டதாகச் செய்தி. பதறிப்போய்விட்டான் பாரதி. ‘‘நான் உடனே அவருடைய மறைவுக்குப் போயாக வேண்டும்’’ எனக் கதறுகிறான். ‘‘இவ்வளவு கலைஞர்களைக் காக்கவைப்பது சரியில்லை. நாம் இன்னொரு நாள் அவருடைய வீட்டுக்குப் போய்வருவோம்’’ எனச் சொல்லியும், பாரதிராஜா கிளம்பிப் போய்விட்டான்.
‘முதல் மரியாதை’ படப்பிடிப்பிலிருந்து கிளம்பிப்போன பாரதிராஜா, பாதி வழியில் என்ன நினைத்தானோ… மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்தான். அவன் கண்ணீர் நிற்கவில்லை. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து, சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் அவனுடைய குருவுக்கு இறுதிச் சடங்கு நடத்திக்கொண்டிருந்தார்கள்.
‘முதல் மரியாதை’ படம் ரிலீஸ் ஆனது. மகத்தான வெற்றி. சிவாஜி சாரின் நடிப்பு, பாரதிராஜாவின் இயக்கம், இளையராஜாவின் இசை… என என் கதைக்கு மகுடம் சூட்டப்பட்டது.
இந்த நேரத்தில் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு போன். ‘‘ரஷ்யாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் வேண்டும். ஒரு பிரின்ட் எவ்வளவு?” என விசாரித்தார்கள். அன்றைய தேதியில் 25 ஆயிரம் ரூபாய்தான் பிரின்ட் செலவு. ‘எதற்கும் இருக்கட்டும்’ என பாரதிராஜா ‘ஒரு லட்ச ரூபாய்’ எனச் சொல்லியிருக்கிறான்.
ஆனால், அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் கேட்டது, ரஷ்யாவுக்கு மட்டும் 100 பிரின்ட். பாரதி இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு பிரின்ட் என்பதால் அந்த ரேட் சொன்னான். 100 பிரின்ட் என மொத்தமாகக் கொடுத்தால், அன்றைய மதிப்பில் ஒரு பிரின்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்கூட இருக்காது. லாபம் கோடிகளில் கொட்டியது. இதை எல்லாம் கேள்விப்பட்டு இளையராஜா ரொம்பத்தான் நொந்துபோனான். ‘இந்தப் படம் ஓடாது, எனக்குச் சம்பளமே வேண்டாம்’ என்றவன் ஆச்சே?” எனத் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொட இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s
